அன்னா பற்றி அருந்ததி ராய்

நாம் சமீபத்தில் தொலைகாட்சியில் பார்த்தது தான் புரட்சி என்றால், அது சமீப கால வரலாற்றில் அருவருக்கத்தக்கதும், அறியாமையில் உருவான முடிவுமாகவே இருக்கும். ஜன லோக்பால் மசோதா குறித்த உங்கள் கேள்வி எதுவாயினும், அதற்குரிய பதில்களை கீழே தரப்பட்டுள்ளவைற்றில் இருந்தே தேர்தெடுக்க வேண்டும். அவை அ) வந்தே மாதரம் ஆ) பாரத் மாதா கி ஜே இ) இந்தியாவே அன்னா, அன்னாவே இந்தியா ஈ) ஜெய் ஹிந்த்.
முற்றிலும் வேறுபட்ட காரணங்களோடும், முற்றிலும் வேறுபட்ட வழிமுறைகளிலும் நட்த்தப்படும் மாவோயிஸப் போராட்டத்துக்கும், ஜன லோக்பால் மசோதாவுக்கும் ஒரு பொது நிலை இருக்கிறது – இரண்டும் இந்திய அரசை தூக்கிலேறிய தீர்மானித்திருப்பதில் இணைகின்றன. ஒன்று கீழிருந்து மேலாக, ஆயுதப் போராட்ட முறையில், ஆதிவாசி மக்களை ராணுவமயப்படுத்தி, ஏழையிலும் ஏழ்மையான மக்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இன்னொன்று, மேலிருந்து கீழாக, இரத்தமற்ற காந்திய கவிழ்ப்பு முறையில் புதிய அவதாரம் எடுத்த துறவி ஒருவர் தலைமையில் நடத்தப்படுகிறது. அதன் படையாக நகரம் சார்ந்த, வசதி வாய்ப்பு உத்தரவாதம் பெற்ற மக்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். (இதனுடன் அரசு முடிந்த மட்டும் இணைந்து தனக்கு தானே குழி பறிக்கிறது)
2011 ஏப்ரலில், அன்னா ஹாசரே முதலில் ‘சாகும் வரை உண்ணா நிலை’ போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே பேச்சுவார்த்தைக்கு அழைத்து , சிற்பல காரணங்களால் சில மாதங்கள் சென்ற பிறகு, அரசு அதன் முயற்சியைக் கைவிட்டு, தான் தயாரித்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த்து. அதனை ஏற்க முடியாது என்று அறிவித்த ‘குழு அன்னா’.ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலையில், தனது இரண்டாவது ‘சாகும் வரை உண்ணா நிலை’ போராட்ட்த்தை அறிவித்தார் அன்னா. ஒரு சட்ட மீறலை அவர் செய்யும் முன்னரே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இந்த ‘இரண்டாம் சுதந்திரப் போர்’ ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே அன்னா விடுதலையானார்.
ஆனால் சிறையிலிருந்து சிறப்பு விருந்தினராக அமர்ந்து, அங்கேயே ஒரு உண்ணா விரதத்தை, பொது இடத்தில் உண்ணாவிரதம் நடத்தும் உரிமைக்காக ஆரம்பித்தார். மூன்று நாட்கள், மக்கள் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் வெளியே ஆக்ரமித்து நிற்க, குழு அன்னா உறுப்பினர்கள் உள்ளேயும், வெளியுமாக பறந்து கொண்டிருந்தார்கள் தேசிய ஊடகங்களுக்கு தீனி போட, அன்னாவினுடைய வீடியோ செய்திகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். (வேறெந்த மனிதருக்கு இந்த டாம்பீகம் வழங்கப்படும்? சொல்லுங்கள்.) இன்னொரு பக்கம், டெல்லி மாநகராட்சியின் 250 ஊழியர்கள், 15 லாரிகளுடன், 6 மண் சீராக்கும் வண்டிகளுடன் ஓய்வு ஓமிச்சலின்றி 24 மணி நேரமும், சேறு நிறைந்த ராம்லீலா மைதானத்தில் இந்த வார இறுதி நாளைய காட்சி கொண்டாட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்தனர். இப்போது மிகவும் எதிர்பார்த்த பஜனை கூட்டமும், கிரேன் உயரத்தில் கேமிராக்களும் பார்க்க, இந்தியாவின் திறமை வாய்ந்த மருத்துவர்களின் கண்காணிப்புடன் அன்னாவின் மூன்றாவது கட்ட சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் தொடங்கியது, ‘ காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றே’ என டி.வி வருணனையாளர்கள் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்னா ஹசாரேவின் வழிமுறை வேண்டுமானால் காந்திய முறைப்படி இருக்கலாம். அவருடைய கோரிக்கைகள் நிச்சியமாக காந்தியம் இல்லை. காந்தியம் கொள்கைகள் அதிகாரப் பரவலாக்கத்தை பேசுபவை. ஊழலை ஒழிக்க இந்த சட்டம் பயன்படுமா? பயன்படாதா? என்பது ஊழல் முறைகேடுகள் குறித்த நமது சமூகப் புரிதலை அடிப்படையாக கொண்டுள்ளது. ஊழல் வெறுமனே ஒரு சட்டநுணுக்கப் பிரச்சனையா? நிதி நிர்வாகச் சீர்கேடா? லஞ்சமா? அல்லது ஏற்றத்தாழ்வு புரையோடிய சமூகத்தில், சமூகப் பரிவர்த்தனையின் ஒரு அங்கமா? அதிகாரம் மேலும் மேலும் கெட்டித்திரள, ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிறு குழு இதனை செய்கிறதா? உதாரணத்திற்கு, பெரிய ஷாப்பிங் மால்கள் இருக்கும் ஒரு மாநகரத்தை எடுத்துக் கொள்வோம். வீதி வியாபாரிகள் அங்கு தடை செய்யப் படுகிறார்கள். ஒரு சிறு லோக்கல் போலீசுக்கும், நகராட்சி அலுவலருக்கும் சிறிய தொகையை கப்பமாக செலுத்தி தனது பொருட்களை விற்கிறார்கள். ஷாப்பிங் மால் சென்று வாங்க இயலாத ஏழை மக்கள் அவரை பயன்படுத்தி கொள்கிறார்கள். இது என்ன பெரிய கொடுஞ் செயலா? எதிர்காலத்தில் பகுதி லோக்பால் பிரதிநிதிக்கும் இந்த கப்பத்தை அந்த ஏழை வியாபாரி செலுத்த வேண்டுமா? அடித்தட்டு மக்கள் அவதியுறும் பிரச்சினைகளுக்கு தீர்வு அமைப்பு ரீதியாகவே உறைந்துள்ள ஏற்றத்தாழ்வை களைவதில் இருக்கிறதா? அல்லது இன்னொரு அதிகார அமைப்பை ஏற்படுத்தி மக்களை இன்றும் அன்னியப்படுத்துவதில் இருக்கிறதா?
இன்னொரு புறத்தில், அன்னா புரட்சியின் முழக்கங்கள், சைகைகள், நடன அசைவுகள், வெறியூட்டப்பட்ட தேசியவாதம் மற்றும் கொடி அசைத்தல் யாவும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டம், உலக்க கோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை கொண்டாட்டங்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன. அனாவின் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரிக்கவில்லையெனில் நாம் ‘உண்மையான இந்தியரில்லை’ என்பதை உணர்த்தும் சமிக்ஞைகளை இது கொண்டுள்ளது. 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் இந்த நாட்டின் வேறெந்த செய்தியும் தமக்கு முக்கியமல்ல என்று முடிவெடுத்து உள்ளன போலும்.
இந்த உண்ணாநிலைப் போராட்டம், மணிப்பூரில், ஒருவரை சந்தேகப்பட்டாலே ராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரம் ஷர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இப்போது, வலுக்கட்டாயமான முறையில் உணவு குழாய்கள் மூலம் செலுத்தப்படுகிறது)கூடங்குளம் அணு உழைக்கு எதிராக பத்தாயிரம் கிராம மக்கள் நடத்தும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை போன்றாதுமல்ல.ராம்லீலா மைதானத்தில் அணிதிரண்டு இருக்கும் ’மக்கள்’ ஜரம் ஷர்மிளாவின் போராட்டத்தை ஆதரிக்கும் மணிப்பூர் மக்களின் உணர்வலையைக் கொண்டவர்கள் அல்லர்; ஜகத்சிங்பூர், கலிங்கா நகர் , நியாம்கிரி, பஸ்தார், ஜெய்தாபூர் போன்ற இடங்களில் போலீசையும், சுரங்க கொள்ளையர்களையும் அன்றாடம் எதிர்கொள்ளும் மக்கள் அல்லர், இவர்கள். போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோரோ, நர்மதா அணை கட்டுமானத்திற்காக வெளியேற்றப்பட்ட மக்களோ அல்லார், இவர்கள். செய்டா, பூனே, அரியானா மற்றும் நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் தனது நிலத்தைப் பறிக்கும், வன்செயலுக்கு எதிராகப் போராடும் விவசாய மக்களும் அல்லது, இவர்கள்.
‘இந்த மக்கள்’ ஒரு ரசிகர் பட்டாளம். 74 வயதான மனிதர் ஒருவர் தான் முன்வைக்கும் ஜன லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செது சட்டமாக்கவில்லை என்றால் பட்டினி கிடந்து உயிரை மாய்ப்பதாக மிரட்டுவதை கண்குளிர பார்க்க கோடி கண்களுடன் வந்திருக்கும் ஒரு கூட்டம். இயேசு கிறிஸ்து மீன்களையும், அப்பத்தையும் தொட்டு பல்கி பெருகச் செய்து பசித்தவர்களுக்கு உணவளித்தது போல ஆயிரக்கணக்கில் திரண்டவர்களை அற்புதம் செய்து லட்சக்கணக்கில் மாற்றின நமது தொலைக்காட்சி ஊடகங்கள், ‘கோடிக்கணக்கான உள்ளங்கள் உதடு திறந்து இந்தியாவே அன்னா என்று உரைத்தன’ என்றார்கள்.
யார் இவர், உண்மையில்? இந்த புது துறவி மக்களுடைய குரலா? உடனடி தீர்வுக்கு ஏங்கி நிற்கும் மக்கள் பிரச்சினைகள் எதன் மீதும் கருத்து தெரிவிக்காதவர். தனது அருகில் நிகழும் விவசாயிகள் தற்கொலையிலிர்ந்து தொலைவில் நடக்கும் ‘ஆப்ரேசன் கிரீன் ஹண்ட்’ வரையிலும் எதற்கும் வாய் திறந்த்தில்லை. மத்திய இந்தியாவின் வனப்பகுதியில் ராணுவத்தை நிறுத்த திட்டமிட்டிருந்த நேரத்தில் இந்திய அரசின் நோக்கம் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் அக்கரையில்லாத மனிதர், இவர். ஆனால் ராஜ் தாக்கரேவின் இனவெறிக் கொள்கையான மராட்டியம் மராட்டியவர்க்கே முழக்கத்தை ஆதரிக்கிறார். குஜராத்தின் ‘வளர்ச்சி மாநிலம்’ பாராட்டியவர், 2002-ல் முசுலீம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. (அன்னா தனது பாராட்டு அறிக்கையை எதிர்ப்புக்கு பிறகு திரும்பப் பெற்றார் எனினும், பாராட்டு மனநிலையை மாற்றவில்லை)
இத்தனை அன்னா ஆரவாரத்துக்கு நடுவிலும், சில நேர்மையான இதழாளர்கள் தமது கடமையை செய்ய மறக்கவில்லை. கடந்த காலத்தில் அன்னா RSS- உடன் கொண்டிருந்த உறவு அம்பலமாகியிருக்கிறது. அன்னாவின் கிராமமான ரலேகான் சித்தியை ஆய்வு செய்த முகுல் ஷர்மா, அங்கு கிராம பஞ்சாயத்து தேர்தலோ, கூட்டுறவு சங்கத் தேர்தலோ 25 வருடங்களாக நடை பெறவில்லை என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார். ‘அரிஜன்கள்’ பற்றிய அன்னாவின் கருத்து என்ன தெரியுமா? “அது மகாத்மா காந்தியின் பார்வையோடு இணைந்தது. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு சமர், ஒரு சனர், ஒரு கும்கர் என்ற ஏற்பாடு இருக்க வேண்டும். அனைவரும் தத்தமது கடமையையும், வேலையையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும். அதனூடாக ஒரு கிராம சுயசார்பு தன்மையைப் பெறும். இதனைத் தான் நாங்கள் ரலேகான் சித்தியில் கடைப்பிடித்து வருகிறோம்.” எனவே, இந்த ‘குழு அன்னா’வுடன் ‘சமத்துவத்துக்கான இளைஞர்கள்’ மற்றும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கங்கள் இணைந்திருப்பது உங்களை ஆச்சிரியப்படுத்துகிறதா? என்ன.
இப்போராட்டத்தை கையிலெடுத்து நடத்தும் NGO க்கள் கோகோ கோலா மற்றும் லேமேன் பிரதர்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியுதவி பட்டியலில் இருக்கின்றன. அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோர் குழு அன்னாவின் முக்கிய உறுப்பினர்கள். இவர்கள் நடத்தும் NGO-வான ‘காபிர்’ 4 லட்சம் டாலர்களை ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து கடந்த 3 வருடங்களில் பெற்றுள்ளது. ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ போராட்டத்தின் புரவலர்களாக அலுமினியன் ஆலை, துறை முகங்கள் மற்றும் SEZ அமைத்துக் கொடுக்கும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் இந்தியாவின் பெரிய நிறுவங்கள் உள்ளன. மட்டுமின்றி, இவர்களுக்கு இந்தியாவின் பெரிய நிதி சாம்ராஜ்யங்களை ஆயிரக்கணக்கான கோடிகளில் நடத்தும் பணமுதலை அரசியல்வாதிகளுடனும் தொடர்பு இருக்கிறது. அவர்களின் சிலர் ஊழல் மற்றும் இதர குற்ற நடவடிக்கைகளுக்காக விசாரிக்கப்பட்டும் வருகின்றனர். இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த ஆதரவின், ஆர்வத்தின் பின்னணி தான் என்ன?
ஒன்றை நினைவில் நிறுத்துவோம், விக்கிலீக் அம்பலப்படுத்திய மோசடிகளை தொடர்ந்து சீரான முறையில் ஊழல் விவகாரங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. 2G ஸ்பெக்ட்ரம் வெளிப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், மூத்த இதழாளர்கள், அமைச்சர்கள், காங்கிரஸ், பாஜக அரசியல்வாதிகள் அனைவரும் கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கில் கோடிகளை கொள்ளையடித்த நேரத்தில் ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்றும் கோரிக்கை வலுப்பெற்றது. வரலாற்றில் முதல்முறையாக தொழில் தரகர்களாக பத்திரிக்கையாளர்களை இந்த நாடு கண்டது. ஊழல் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை துவங்க சரியான நேரமாக இது அமைந்தது. இல்லையா?
அரசு தனது பாரம்பரியமான கடமைகளான குடிநீர் வழங்கல், மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றிலிருந்து இடம் பெயர்ந்துள்ளது. இந்தப் பணிகளை பராசுர நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும் இப்போது செய்கின்றன. மக்களுடைய எண்ணங்களை வடிவமைக்கும் இடத்தில் பயங்கர அதிகாரமும், வீச்சும் கொண்ட கார்ப்பரேட் ஊடகங்கள் வந்திருக்கின்றன. இந்த விஷச் சுழலில் கார்ப்பரேட் நிறுவனங்களும், ஊடகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளும் லோக்பால் சட்டவரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் இந்த ஜனலோக்பால் மசோதா முழுவதுமாக இவர்களுக்கு விலக்கு அளித்திருக்கிறது.
பெருங்குரலெடுத்து தீய அரசியல்வாதிகள், அரசு முறைகேடானது என்று கூச்சல் போட்டு மேற்படி நிறுவனங்களை மிகத் தந்திரமான முறையில் தப்பிக்க வழி வகுத்துள்ளார்கள். புனித பீடம் ஒன்றின் மீது ஏரி நின்று கொண்டு அரசை மட்டும் கொடூரமாகச் சித்தரித்து, அரசை மக்கள் அரங்கிலிருந்து முழுவதுமாக வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். இரண்டாம் கட்ட சீர்திருத்தமாக கூடுதல் வேகத்தில் தனியார்மயமாக்கம், கூடுதலான முறையில் அடிப்படைக் கட்டுமானம் மற்றும் இந்தியாவின் இயற்கை வளங்களை சுரண்ட அழைப்புவிடுக்கிறார்கள். கார்ப்பரேட் ஊழல் முறைகேடுகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு அது ‘லாபியிங்’ கட்டணமாக பெயர் சூட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகவில்லை. 830 மில்லியன் இந்திய மக்கள் நாள் ஒன்றிற்கு ரூ 20 சம்பாதிக்கும் நிலையில் உள்ளார்கள். இவர்களை மேலும் வறிய நிலைக்கு நெட்டித் தள்ளி, இந்த நாட்டில் ஒரு உள்நாட்டு போரை உருவாக்கும் வகையில் அமைந்துள்ள கொள்கைகளால், மக்களுக்கு என்ன பயன்?
இந்த நெருக்கடி நிலை நாம் பின்பற்றி வரும் ஜனநாயத்தின் தோல்வி, பாராளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல்களாகவும், பணக்கார அரசியல்வாதிகள் மக்களின் பிரதிநிதியாக செயல்படும் தகுதியை இழந்துள்ளனர். இதன் காரணமாக நிலுவையில் இருக்கும் எந்த ஜனநாயக அமைப்பும் மக்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. தேசியக் கொடி அசைப்பை பார்த்து ஏமாற வேண்டாம். சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானில் போர் பிரபுக்கள் நிகழ்த்திய போரை போன்ற ஒரு நிலையைத் தான் நாம் இப்போது இந்தியாவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக