இணையற்ற லாபம் தரும் இயற்கை அரிசி!



வெளவால் எச்சமும் உரம்.
மகசூலைக் கூட்டும் முருங்கைச்சாறு.
அரிசியாக அரைத்தால் கூடுதல் லாபம்.
பண்ணைக்குள்ளேயே இருக்கும் பொருட்கள், கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தியே 'தற்சார்பு வேளாண்மை’ செய்வதுதான் இயற்கை வழி  விவசாயத்தின் தத்துவம். அதனால்தான், இயற்கை வழி விவசாயத்துக்கு மாறும் விவசாயிகள் பலரும், பண்ணையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே, புதுப்புது யுக்திகளை மேற்கொண்டு, வெற்றிக் கொடி பறக்க விட்டுக் கொண்டுள்ளனர்.
இங்கே... முருங்கைக்கீரைச் சாறு மற்றும் வெளவால் எச்சம் ஆகியவற்றையே இடுபொருட்களாகப் பயன்படுத்தி, ஆச்சரியமூட்டும் வகையில் நெல் சாகுபடி செய்து வரும் தஞ்சாவூர் மாவட்டம், இரும்புத்தலை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மற்றும் அவருடைய மகன் முத்துக்குமார் ஆகியோரை இப்போது நாம் சந்திக்கிறோம்.
உற்சாகமாகப் பேச்சைத் தொடங்கும் முத்துக்குமார், ''ஈரோடு, திண்டல்

முதல் வருடம் மகசூல் குறைவு!
பகுதியில 'பசுமை விகடன்’ நடத்தின 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி முகாமுல கலந்துக்கிட்ட பிறகுதான், இயற்கை வழி விவசாயத்துக்கு நாங்க மாறினோம். பயிற்சி முடிஞ்சு வந்த கையோட நாட்டு ரகமான ரெண்டு சிந்துக் காளை, 4 கிடை இனப் பசுக்களை வாங்கிட்டோம். அதுங்க மூலமா கிடைச்ச கழிவுகளை வெச்சு... ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம்னு தயாரிக்க ஆரம்பிச்சு, முழு ஜீரோ பட்ஜெட்டுக்கு மாறிட்டோம்'' என்று சொல்லிவிட்டு, படிப்படியாக தாங்களின் சாகுபடி பற்றி விவரித்தார்.
''முதல் வருஷம் ஏ.டி.டி-43 ரக நெல் போட்டோம். ஏக்கருக்கு 8 சென்ட்டுங்ற கணக்குல நாற்றங்கால் அமைச்சு, 300 கிலோ தொழுவுரம், 10 கிலோ கனஜீவாமிர்தம் போட்டு, ஜீவாமிர்தம் எல்லாம் விட்டோம். முப்பது நாள் ஆகியும் முக்கால் அடி உயரத்துக்குதான் நாத்து வளர்ந்திருந்துச்சு.
சரி நடவு செய்து பார்ப்போம்னு, அதைப் பறிச்சு நட்டோம். ஏக்கருக்கு 300 கிலோ தொழுவுரம், 100 கிலோ கனஜீவாமிர்தம், மூணு தடவை பாசனத் தண்ணியில ஜீவாமிர்தம்னு எல்லாம் சரியா கொடுத்தோம். ஆனா... பெரியளவுல பயிர் வளர்ச்சி இல்லை. ஏக்கருக்கு 24 மூட்டைதான் (60 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. இயற்கைக்கு மாறும்போது, ஆரம்பத்துல மகசூல் குறைச்சலாத்தான் கிடைக்கும்.
அதனால, 'இயற்கை முறையிலேயே சீக்கிரமா விளைச்சலை எப்படிக் கூட்டுறது?’னு யோசிக்க ஆரம்பிச்சோம்.
யோசனையில் விளைந்த சோதனை !
எங்களுக்குச் சொந்தமான பழங்காலக் கட்டடம் இருந்துச்சு. அதை யாரும் புழங்குறது இல்லைங்கறதால ஏகப்பட்ட வெளவால்கள் அதுல இருந்துச்சு. தரை முழுக்க வெளவால் எச்சமா கிடக்கும். அதைப் பாக்குறதுக்கு மண்புழு உரம் மாதிரியே இருக்கும். 'அதை அள்ளி நிலத்துல போட்டா என்ன?’னு தோணுச்சு. அதை செயல்படுத்தலாம்னு இறங்கினப்போதான்... 'முருங்கைக்கீரைச் சாறும் தெளிச்சுப் பார்ப்போம்’னு அவருக்குத் தோணின யோசனையைச் சொன்னார் அப்பா.
நம்பிக்கை கொடுத்த வெளவால் எச்சம் முருங்கைச்சாறு!
அடுத்த போகத்துலேயே ஏ.டி.டி-43 ரக நெல்லுக்கு நாற்றங்கால்ல இருந்தே வெளவால் எச்சம், முருங்கைக்கீரைச் சாறு, கனஜீவாமிர்தம் எல்லாத்தையும் கொடுக்க ஆரம்பிச்சோம். எதிர்பார்த்த மாதிரியே முப்பது நாள்ல ஒரு அடி உயரத்துக்கு செழிப்பா வளந்துடுச்சு. எடுத்து நடவு செஞ்சப்ப முன்றரையடி உயரத்துக்கு பயிர் வளர்ந்துடுச்சு.
பச்சை பிடிக்காததால் பூச்சிகள் தாக்கவில்லை!
ரசாயன உரம் கொடுக்குறப்போ... பயிர் கருகருனு பச்சையா இருக்கும். அதனாலயே ஏகப்பட்ட பூச்சிங்க தாக்கும். ஆனா, இயற்கை உரம் போட்டப்ப வெளிர் பச்சையாவே பயிர் இருந்ததால... பூச்சித் தாக்குதல் இல்லவே இல்லை.
ஏக்கருக்கு 27 மூட்டைங்கிற கணக்குல மகசூல் கிடைச்சுது. அதுக்கடுத்த வருஷம் 30 மூட்டை கிடைச்சுது'' என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட முத்துக்குமார்,
பாரம்பரிய ரகத்திலும் நிறைவான மகசூல் !
''இந்த வருஷம் குறுவை சாகுபடியில மூணு ஏக்கர் கருங்குருவை, மூணு ஏக்கர் வெள்ளங்கார், மூணு ஏக்கர் பூங்கார்னு பாரம்பரிய ரகங்கள சாகுபடி செஞ்சோம். நாத்து விடாம நேரடியாவே விதையைத் தெளிச்சுட்டோம். ஏ.டி.டி-43 ரகத்துக்கு செய்த மாதிரியே ஜீவாமிர்தம், முருங்கைச்சாறு, வெளவால் எச்சம் இதைத்தான் கொடுத்தோம். ஏக்கருக்கு 18 மூட்டை வரைக்கும் மகசூல் கிடைச்சுது. பாரம்பரிய ரகங்களைப் பொருத்தவரைக்கும் இதுவே நல்ல நிறைவான மகசூல்தான்'' என்று மனநிறைவோடு சொல்லி நிறுத்தினார்.
விற்பனைக்கு உதவிய பசுமை விகடன்!
அவரைத் தொடர்ந்த நாகராஜன், ''ரசாயனத்துல சாகுபடி செய்தப்போ அறுவடை முடிஞ்சதும் அப்படியே நெல்லாவே வித்துடுவோம். ஆனா, 'பசுமை விகடன்’ல வர்ற கட்டுரைகளையெல்லாம் படிச்ச பிறகு, மதிப்புக் கூட்டி வித்தா கூடுதல் லாபம்னு தெரிஞ்சிக்கிட்டு, அரிசியா அரைச்சு விக்க ஆரம்பிச்சோம். அதுக்கும்கூட பசுமை விகடன்ல வர்ற 'வாங்க, விற்க’ பகுதியே எங்களுக்கு உதவியா இருக்கு. இதன் மூலமாவே எங்களோட இயற்கை அரிசிக்கு தமிழ்நாடு முழுக்க ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் கிடைச்சுருக்காங்க.
ஒரு ஏக்கர்ல விளைஞ்ச 1,800 கிலோ ஏ.டி.டி-43 ரக நெல்லை விலைக்குக் கொடுக்கறப்ப, 18 ஆயிரம் ரூபாய்தான் வருமானம். ஆனா, அரிசியா அரைக்கும்போது.. 1,125 கிலோ கிடைக்குது. இயற்கை வழி விவசாயத்துல விளைஞ்ச அரிசிங்கிறதால கிலோ 35 ரூபாய்க்கு விற்க முடியும். இதன் மூலமா ஏக்கருக்கு 39,375 ரூபாய் வருமானம் கிடைக்கும். எல்லா செலவும் போக... ஏக்கருக்கு 29 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபமா கிடைக்கும்'' என்று சொன்ன நாகராஜன்,
''இயற்கை வழி விவசாயம் நன்றாகவே கைகொடுக்குது. இந்த நம்பிக்கையோட சென்னை, குரோம்பேட்டையில இயற்கை அங்காடி திறக்கப் போறேன். என் தோட்டத்துல விளையற பொருட்களை அங்க விற்பனை செய்யப் போறேன்' என்று அடுத்த அடி எடுத்து வைக்கும் திட்டத்தையும் சொன்னார் நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியோடு!

இப்படித்தான் சாகுபடி செய்யணும்...  
வெளவால் எச்சம், முருங்கைக்கீரைச் சாறு ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒரு ஏக்கரில் ஏ.டி.டி-43 ரக நெல்லை முத்துக்குமார் மற்றும் நாகராஜன் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் இதோ-
ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு, 8 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். அதில், 10 கிலோ கனஜீவாமிர்தம், 2 கிலோ வெளவால் எச்சம் ஆகியவற்றைப் போட்டுப் பரப்பி, 25 கிலோ ஏ.டி.டி-43 ரக விதைநெல்லைத் தெளித்து, வழக்கமான முறையில் தண்ணீர் கட்ட வேண்டும். 15-ம் நாள் 3 லிட்டர் முருங்கைக்கீரைச் சாறு தெளிக்க வேண்டும் (5 கிலோ முருங்கைக்கீரைகளை குச்சி இல்லாமல், ஆய்ந்து அரைத்து, 15 லிட்டர் தண்ணீருடன் கலந்து வடிகட்டினால்... முருங்கைக்கீரைச் சாறு தயார்).
ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தை உழுது பரம்படித்து, 100 கிலோ கனஜீவாமிர்தம், 10 கிலோ வெளவால் எச்சம் ஆகியவற்றைப் போட்டு, 30 நாள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 15-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 20-ம் நாள் 15 லிட்டர் முருங்கைக்கீரைச் சாறை, 115 லிட்டர் தண்ணீரில் கலந்து, வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். 40-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். இதற்குப்பிறகு வேறு எந்த இடுபொருட்களுமே தரத் தேவையில்லை.


தொடர்புக்கு
நாகராஜன், அலைபேசி: 99443-44608,
முத்துக்குமார், அலைபேசி: 99949-01135


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக