ஒரு வருடத்தில் 45 கிலோ எடை.
வருடத்துக்கு 450 குட்டிகள்.
சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருந்தாலும் சரி... பெரு விவசாயிகளாக இருந்தாலும் சரி... அவர்களுக்கு ஆபத்து நேரங்களில் கை கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். அதிலும் குறைந்த முதலீடு, குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்டிக் கொடுப்பது ஆடு வளர்ப்புதான். தற்போது விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் சுருங்கிக் கொண்டே வரும் சூழ்நிலையில், 'கொட்டில் முறை ஆடு வளர்ப்பு’ விவசாயிகளிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தலைச்சேரி மற்றும் போயர் ஆடுகளைக் கலப்பினம் செய்து, கொட்டில் முறையில் வளர்த்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்.
''எங்கப்பா, பால் பண்ணை வெச்சுருந்தார். அதனால, எனக்கு சின்ன வயசுல இருந்தே கால்நடை வளர்ப்புல ஈடுபாடு அதிகம். ஆனா, சூழ்நிலையால பிசியோதெரபி படிச்சுட்டு வேலைக்குச் சேர்ந்தேன். அதுல கிடைச்ச வருமானம்... திருப்தியா இல்லை. அதனால, தொழிலை மாத்தலாம்னு யோசிப்பதான், 'ஆடு வளக்கலாம்'னு தோணுச்சு. உடனே அது சம்பந்தமான விஷயங்களைத் தேடி அலைய ஆரம்பிச்சேன். அப்போதான் கொட்டில் முறை பத்தியும், கலப்பினங்களைப் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே ஆடு வளர்ப்புல இறங்கிட்டேன்' என்று உற்சாகமாக ஆரம்பித்த வெங்கடேசன், தொடர்ந்தார். பிஸியோதெரபியிலிருந்து ஆடு வளர்ப்புக்கு!
அதிக எடைக்கு போயர் ஆடுகள்!
'போயர் ரக ஆடுதான் சீக்கிரமாவே அதிக எடைக்கு வந்துடும்னு சொன்னாங்க. அதனால மகாராஷ்டிரா மாநிலத்துல இருந்து ஒரிஜினல் போயர் ரகத்துல 18 பெட்டைகளையும், 2 கிடா ஆடுகளையும் வாங்கிட்டு வந்தேன். அதோட தலைச்சேரி, சிரோஹி, கன்னியாடு, கொடியாடு ரக பெட்டைகளையும் வாங்கினேன். ஒவ்வொரு இனத்தோடயும் போயர் கிடாக்களைக் கலப்பு செஞ்சு பாத்ததுல, தலைச்சேரி இனத்தோட கலப்பு செஞ்சு பிறந்த குட்டிக மத்ததுகளவிட சாதுவாவும் ஆரோக்கியமாவும் இருந்துச்சு. அதோட ஒரே ஈத்துல மூணு குட்டிக வரைக்கும் பிறந்துச்சு. அதனால மத்த இனங்களையெல்லாம் ஒதுக்கிட்டு, 100 தலைச்சேரி பெட்டைகளை மட்டும் வாங்கினேன். இப்போ போயர் கிடா, தலைச்சேரி பெட்டைகளை மட்டும் கலந்து கலப்பினக் குட்டிகளை பெருக்கிட்டிருக்கேன். தனியா, சுத்தமான போயர் ரகத்தையும் பெருக்கிட்டிருக்கேன்.
அறிவியல் முறையில் ஆடு வளர்ப்பு!
எங்கிட்ட இருக்குற எல்லா ஆடுகளையும் பத்தி கம்ப்யூட்டர்ல பதிவு பண்ணி வெச்சுடுவேன். ஆட்டோட வயசு, எத்தனை முறை குட்டி போட்டிருக்கு, எத்தனை குட்டிக, எப்போ கிடாவோட சேர்த்தோம், என்னென்ன வைத்தியம் பார்த்திருக்கோம்னு அத்தனைத் தகவலும் பட்டணைத் தட்டுனவுடனே கிடைச்சுடும். அதனால ஒழுங்கா குட்டி ஈனாத, அடிக்கடி நோய் தாக்குற ஆடுகளையெல்லாம் கழிச்சு, நஷ்டத்தைக் குறைச்சுட முடியுது. வருமானமும் கூடுது.
பராமரிப்பு எளிது!
இப்போ என்கிட்ட போயர் இனத்துல 12 கிடா, 24 பெட்டை; தலைச்சேரி இனத்துல 106 பெட்டை; கலப்பினத்துல 94 ஆடுகள்னு மொத்தம் 236 ஆடு இருக்கு. இதுபோக மொத்தமா 40 குட்டிகளும் இருக்கு. இந்த ஆடுகளுக்காக 5 ஏக்கர் நிலத்துல கோ-4, கோ-3, கோ.எஸ்.எஃப்-29, சவுண்டல் (சூபாபுல்), கல்யாணமுருங்கை, கிளரிசீடியானு பசுந்தீவனங்களையும் வளர்த்துக்கிட்டிருக்கேன். கொட்டில் முறைங்கறதால பெரிசா பராமரிப்பு வேலைகள் கிடையாது. ரெண்டு பேர்தான் மொத்தப் பண்ணையையும் பராமரிச்சுட்டிருக்காங்க' என்ற வெங்கடேசன் வளர்ப்பு முறைகளைப் பற்றி பாடமே நடத்த ஆரம்பித்துவிட்டார் இப்படி-
தீவனம்தான் முதலில்!
''ஆடு வளர்ப்பில் இறங்கலாம் என்று தீர்மானித்த உடனேயே, முதலில் பசுந்தீவனங்களை வளர்க்க ஆரம்பித்துவிட வேண்டும். ஓரளவுக்கு தீவனங்கள் தயாரான பிறகு, நாம் வளர்க்கப் போகும் ஆடுகளின் எண்ணிக்கை, நம்மிடமுள்ள இட வசதி, பொருளாதார வசதி ஆகியவற்றுக்கேற்ப ஆடுகளுக்கான கொட்டிலை அமைத்துக் கொள்ளலாம். ஒரு ஆட்டுக்கு, சராசரியாக 20 சதுர அடி இடம் இருக்க வேண்டும். பொதுவாகக் கொட்டிலின் அகலம் 25 அடி அளவில் வைத்துக் கொள்வது நல்லது. நீளத்தைத் தேவையான அளவுக்கு அமைத்துக் கொள்ளலாம். தரையில் இருந்து நான்கு அடி உயரத்தில் கிழக்கு-மேற்காக நீளவாக்கில் கொட்டிலை அமைக்க வேண்டும். ஆடுகளின் கால்கள் சிக்கிக் கொள்ளாத அளவுக்கு இடைவெளி கொடுத்து, மர ரீப்பர்கள் மூலம் கொட்டிலின் அடிப்பகுதியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
வேறு வேறு இடங்களில் வாங்க வேண்டும்!
தாய் மற்றும் 20 நாட்கள் குட்டி; 20 நாட்கள் முதல் 3 மாத வயது; 3 மாதம் முதல் 6 மாத வயது; 6 மாத வயதுக்கு மேல் உள்ள ஆடுகள்; இளம் சினையாடுகள்; முற்றிய சினையாடுகள்; கிடாக்கள் என ஆடுகளை ஏழு வகைப்படுத்தி தனித்தனியாகப் பிரித்து அடைப்பது முக்கியம். அதனால், இந்த ஏழு வகைக்கும் தேவைப்படும் வசதிகளை சரிவர செய்து கொள்ள வேண்டும். பிறகு, ஆடுகளை வாங்கி வந்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.
போயர் கிடாக்களை ஒரு பண்ணையிலும், தலைச்சேரி பெட்டைகளை வேறு பண்ணையிலும் வாங்க வேண்டும். முடிந்தளவுக்கு வெவ்வேறு பண்ணைகளில் ஆடுகளை வாங்கி வருவது நல்லது. அப்போதுதான் மரபணு குறைபாடுகள் இல்லாத குட்டிகளை உருவாக்க முடியும்.
பொலி கிடாவுக்கு 2 வயது இருக்க வேண்டும்!
ஆறு மாத வயதுக்கு மேல் பெட்டைகள் பருவத்துக்கு வரும். இடைவிடாமல் கத்திக் கொண்டும் வாலை ஆட்டிகொண்டே இருப்பதை வைத்தும் பருவத்துக்கு வந்ததைத் தெரிந்து கொள்ளலாம். அந்த நேரத்தில் இனப்பெருக்க உறுப்பில் வழவழப்பான திரவமும் வெளிப்படும். பருவ அறிகுறி தெரிந்த 12 மணி நேரத்தில் கிடாவைச் சேர்த்துவிட வேண்டும். பொலி கிடாவுக்கு இரண்டு வயது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை கிடாக்களை மாற்றிவிட வேண்டும். பருவத்துக்கு வரத் தாமதமாகும் பட்சத்தில், கிடாக்களை அருகில் கட்டி வைத்தால், பெட்டை ஆடுகள் விரைவில் பருவத்துக்கு வந்துவிடும்.
குட்டி ஈன்ற ஆடுகளையும் இதுபோல அடுத்த மூன்று மாதங்களிலேயே பருவத்துக்கு வர வைத்து விடலாம். ஆடுகளின் சினைக் காலம் 8 மாதங்கள். ஓர் ஆடு, இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை குட்டி ஈனும். போயர் கிடாவுக்கும் தலைச்சேரி பெட்டைக்கும் பிறக்கும் கலப்பினக் குட்டிகள், ஆரம்பத்தில் இரண்டரை கிலோ முதல் மூன்றரை கிலோ வரை எடை இருக்கும். 3 மாதங்களில் 10 கிலோ முதல் 12 கிலோ வரை வந்துவிடும். 6 மாதங்களில் 25 கிலோ வரையும் ஒரு வருடத்தில் 45 கிலோ வரையும் எடை வந்து விடும்.
20 நாட்கள் வரை மட்டும்தான் தாயுடன்!
குட்டிகள் பிறந்து 20 நாட்கள் வரை தாயுடனே இருக்க விடலாம். அதற்கு மேல் குட்டிகளைத் தனியாகப் பிரித்து தீவனங்களைச் சாப்பிடப் பழக்க வேண்டும். பால் குடிக்கும் நேரத்துக்கு மட்டும் தாயுடன் சேர்க்க வேண்டும். மூன்று மாத வயது வந்தவுடன் பெட்டைகளையும் கிடாக்களையும் தனித்தனியாகப் பிரித்து வளர்க்க வேண்டும். அதேபோல வயது வாரியாகவும், இளம் சினையாடுகள், முற்றிய சினையாடுகள், குட்டி ஈன்ற ஆடுகள் எனவும் தனித்தனியாகப் பிரித்து வைக்க வேண்டும்.
வயதுக்கேற்ப தீவனம்!
வேலிமசால், முயல்மசால், கிளரிசீடியா, சவுண்டல் போன்ற இலை வகைத் தீவனங்களில் 60 சதவிகிதமும், கோ-4, கோ-3, கோ.எஃப்.எஸ்-29 போன்ற புல் வகை தீவனங்களில் 40 சதவிகிதமும் இருக்குமாறு கலந்து நறுக்கி ஆடுகளுக்கு பசுந்தீவனமாகக் கொடுக்க வேண்டும். 20 நாள் வயதான குட்டிக்கு, ஒரு நாளைக்கு அரை கிலோ அளவில் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். 3 மாத வயதுடைய குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வரை பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும்.
3 மாதத்துக்கு மேல் வயதுள்ள குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு 5 கிலோ பசுந்தீவனமும் அரை கிலோ அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். நன்கு வளர்ந்த ஆடுகளுக்கு
5 கிலோ பசுந்தீவனம் மற்றும் அரை கிலோ அடர் தீவனத்தோடு... தினமும் ஒரு கிலோ அளவுக்கு கடலைக்கொடி, சோளத்தட்டை போன்ற உலர் தீவனத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் ஆடுகள் மற்றும் பொலி கிடாக்களுக்கு அடர் தீவன அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம்!
வெக்கை மற்றும் துள்ளுமாரி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க, ஆண்டுக்கு ஒரு முறையும், கோமாரி மற்றும் ஜன்னி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க ஆண்டுக்கு இரண்டு முறையும் தடுப்பூசி போட வேண்டும். மூன்று மாத வயது வரை குட்டிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்''
வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொன்ன வெங்கடேசன், நிறைவாக வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
''இதுவரைக்கும் கொட்டில், தாய் ஆடுகள்னு மொத்தம் 25 லட்ச ரூபாய் முதல் போட்டிருக்கேன். நல்ல முறையில பண்ணையைப் பராமரிச்சா... இந்தப் பணத்தை ரெண்டு வருஷத்துல எடுத்துட முடியும். ஒரு ஈத்துக்கு ரெண்டுல இருந்து மூணு குட்டிங்க வரைக்கும் கிடைக்கும். எப்படியும் ரெண்டு குட்டிக்குக் குறையாது. எங்கிட்ட இருக்குற தலைச்சேரி, கலப்பினம், போயர் எல்லாம் சேர்த்து 150 தாய் ஆடுகள் மூலமா... ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை, சராசரியா 900 குட்டிங்க கிடைக்குது. வருஷத்துக்கு சராசரியா 450 குட்டிங்கனு வெச்சுக்கலாம்.
குட்டிகள ஆறு மாசம் வரைக்கும் வளர்த்து, உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்னு விக்கிறேன். ஆறு மாசத்துல ஒரு ஆடு 25 கிலோ வரை எடை வந்துடும். போயர் கலப்பைப் பொருத்து கூடுதல் விலைக்கு வித்துடுவேன். சராசரியா ஒரு ஆட்டுக்கு 5,000 ரூபாய்னு வெச்சிக்கிட்டாலே வருஷத்துக்கு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சுடுது.
பராமரிப்பு, அடர் தீவனம், சம்பளம்னு எல்லா செலவும் போக வருஷத்துக்கு 16 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. ரெண்டு வருஷத்துல முதலீடு கைக்கு வர்றதோட... லாபமும் வர ஆரம்பிச்சுடும்.
சுத்தமான போயர் ஆடுகளுக்கு அதிக விலை கிடைக்கும். அதைக் கணக்குல சேர்க்கல. ஆடு வளர்ப்புல இறங்கினா... முதலீட்டுக்கேத்த அளவுக்குக் கண்டிப்பா வருமானத்தைப் பாத்துட முடியும்'' என்றார் உற்சாகமாக.
அடர் தீவனம் !
கடலைப் பிண்ணாக்கு- 17 கிலோ, தவிடு- 30 கிலோ, கம்பு அல்லது சோளம் போன்ற மாவுச்சத்து மிக்க தானியங்கள் எதுவாக இருந்தாலும்- 50 கிலோ, தாது உப்பு- 2 கிலோ, கல் உப்பு- 1 கிலோ... இவற்றை ஒன்றாக அரைத்தால், 100 கிலோ அடர் தீவனம் கிடைத்து விடும்.
20 நாள் முதல் 3 மாத வயது வரையிலான குட்டிகளுக்கு, 50 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 50 கிலோ தானியங்களை மட்டும் அரைத்து தேவைக்கு ஏற்ப தீவனமாக கொடுத்தால் போதுமானது.
தொடர்புக்கு
வெங்கடேசன், அலைபேசி: 89034-71006,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக