உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்.
நான் சிறந்த மனிதர்களை உருவாக்க வேண்டும்; நல்ல பண்புள்ளவனாக வாழ வேண்டும்; எனது குடும்பத்தையும், என்னையும் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்; அதற்காக குர்ஆனையும் சுன்னாவையும் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்; பிறருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்; தூய்மையான உள்ளத்தோடு வாழ்ந்து சுவனம் சென்று விட வேண்டும். இதுதான் எனது ஆசை. அன்றி, ஆசைகளும் மோகங்களும் நிறைந்த உலகில் என்னால் எதிர்நீச்சல் போட முடியாது. உலகில் அவலங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு போரிட முடியாது. வெறும் உலக நலன்களுக்காக வாழ்பவர்களை ஒரு பொது நோக்கத்தின்பாலோ அல்லது ஒரு பொது நலனின்பாலோ ஒன்றிணைப்பதற்கு மல்லுக்கட்ட முடியாது. சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற இன்னோரன்ன விவகாரங்களில் ஈடுபட்டு சீர்திருத்தம் என்ற பெயரில் காலம் கடத்த முடியாது. முரண்பட்டக் கருத்துடையோரை இனக்கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதில் வெற்றியளிக்காத முயற்சிகளை மேற்கொண்டு நேரம் கடத்த முடியாது. மனித சமூகத்தின் பிரச்சினைகளையும், முஸ்லிம் சமூகத்தின் அவலங்களையும் பேசிப் பேசி காலம் தள்ள முடியாது. நீண்ட எதிர்காலத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற கற்பனையில் என்னால் வாழ முடியாது.
நான் சிலரைப் பார்க்கின்றேன்; அவர்கள் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கிறார்கள். பெரும் பெரும் மனிதர்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்; உலகமெல்லாம் சுற்றிச் சுழன்று உழைக்கிறார்கள்; பெரிய பெரிய விஷயங்களைப் பேசுகிறார்கள்; நிறையவே சாதிக்கலாம் என்கிறார்கள். எதிர்காலம் இப்படி இருக்கும், அப்படி இருக்காது என்று மக்களை நம்ப வைக்கிறார்கள். பெரும் ஆளுமைகளையெல்லாம் இழுத்து வளைத்து தங்களது கைக்குள் போட்டுக் கொள்கிறார்கள். அந்த ஆளுமைகளின் ஆதிக்கத்திற்குள் நான் விழுந்து விடுவேனோ என்று அவர்கள் அச்சப்படுவதில்லை. அவர்களின் பிரச்சினைகளைத் தமது பிரச்சினைகளைகளாக இவர்கள் வார்த்தெடுத்துக் கொள்கிறார்கள். “நீங்கள் பயப்பட வேண்டாம்; நாளை இன்ஷா அல்லாஹ் பிரச்சினை தீர்ந்து விடும்” என்கிறார்கள்.
எனக்கு இவ்வளவு தைரியம் வராது. தைரியம் இருந்தாலும் இந்தளவு சிரமம் எடுத்துக் கொள்ள நான் ஆர்வம் காட்ட மாட்டேன். இத்தகைய நகர்வுகளில் பயன் இருக்குமா? என்பதில் எனக்கு சந்தேகமே எழுகிறது. இதனை விட எனக்கும் எனது குடும்பத்துக்கும் எனக்கு இனக்கமானவர்களுக்கும் நன்மை செய்து விட்டுப்போவதே சாலச் சிறந்தது. இவ்வாறு சிந்திக்கும் ஒருவரைப் பற்றி உங்களது அபிப்ராயம் என்ன? இவர்களோடு நீங்கள் உடன்படுவீர்களா? முரண்படுவீர்களா? இவரது சிந்தனையை குர்ஆனோடும் நபிகளாரின் வாழ்க்கை முறையோடும் ஒப்பிட்டு உரசிப் பார்த்தால் அதனை ஏற்க முடிகிறதா? மேலே படிப்பதற்கு முன் ஒரு முறை உங்களோடு இந்த விஷயங்களைப் பேசிப் பாருங்கள். இந்த வினாக்களை உங்களை நோக்கிக் கேட்டுப் பாருங்கள். உங்கள் பதில் என்ன என்பதை சிந்தனைக்கு எடுத்த பின் மேலே படியுங்கள்.…… …… …. ??
உங்களது பதில் உங்களுக்குக் கிடைத்து விட்டதா? அவ்வாறாயின் தொடருங்கள்.
மேலே கூறப்பட்டவர்கள் நல்ல மனிதர்கள்; சுவர்க்கத்தை ஆசிக்கிறார்கள்; நரகத்தை அஞ்சுகிறார்கள். குர்ஆனையும் சுன்னாவையும் படிக்கிறார்கள். தன்னையும் தனது குடும்பத்தையும் இன்னும் சில இணக்கமான மனிதர்களையும் நல்வழிக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அப்படித்தானே? எனினும், உலகத்தைக் கெட்டவர்களின் கைகளில் கொடுத்து விட்டுத் தூர நின்று கொள்கிறார்கள். கெட்டவர்களின் அருகில் நிற்கவும் இவர்கள் அஞ்சுகிறார்கள். மாற்றங்களைக் கனவு காணவும் இவர்கள் பயப்படுகிறார்கள். பெரிய விஷயங்களைப் பேசுவோரை இவர்கள் பார்த்துப் பரிதாபப்படுகிறார்கள். பெரும் பெரும் மனிதர்களோடுள்ள சகவாசத்தை வெறுக்கிறார்கள். இறுதித் தூதரின் மனப்பாங்கோடும் சிந்தனையோடும் அன்னாரது நடமுறைகளோடும் இந்தப் போக்கு ஒத்துப் போகிறதா? உங்களால் இதனை ஏற்க முடிகிறாதா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனப்பாங்கும் சிந்தனையும் எப்படி இருந்தது?
அது மக்காவில் இஸ்லாத்தைப் போதித்த சோதனை மிக்க காலம். உலகில் ஏதேனும் ஒரு சாதனையை நிலை நாட்ட எண்ணுவது எப்படிப் போனாலும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கே உத்தரவாதமில்லாத காலம். இஸ்லாமும் முஸ்லிம்களும் பலமில்லாது இருந்த காரணத்தால் இம்சைக்குட்படுத்தப்பட்ட காலம்.
நபித்தோழர் கப்பாப் இப்னு அரத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எதிரிகளால் இம்சைக்குள்ளாக்கப்பட்டு கஃபாவை நோக்கி வருகிறார். அங்கு அமர்ந்திருந்த இறைத் தூதரை அவர் காண்கிறார். தனது நொந்து போன இதயத்தை நபிகளாரின் துஆவினால் வருடிக் கொள்ள நினைத்தாரோ என்னவோ, இறைத்தூதரைப் பார்த்துப் பின்வருமாறு கூறுகிறார்:”அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக உதவி கேட்டு அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்திக்கக் கூடாதா?”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்பாப் அவர்களை அமர வைத்து தானும் அவர் முன்னால் அமர்ந்தார்கள்; அமர்ந்தவர்கள் துஆ செய்யவில்லை. ஒரு கதை சொன்னார்கள்.”கப்பாப்! உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் இதனைவிட அதிகமாக துன்புறுத்தப்பட்டார்கள். ஒரு மனிதர் நிலத்தில் நடப்பட்டார். அவரது உடல் இரண்டு துண்டங்களாக வெட்டப்படும். அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட மாட்டார். நீங்கள் அவசரப்படுகிறீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஒரு காலம் வரும்- சன்ஆவிலிருந்து ஹழ்ற மௌத் வரை ஒரு மனிதன் (மற்றுமொரு அறிவிப்பில் ஒரு பெண் என்றுள்ளது) தனிமையில் பயணம் செய்வான்; அவனது உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் தவிர வேறு அச்சம் இருக்காது. சில போது அவனது ஆடுகளை ஓநாய் தாக்கும் என்ற அச்சம் இருக்கலாம்” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இந்த சம்பவம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனப்பாங்கையும் கனவையும் சிந்தனையையும் கோடிட்டுக் காட்டுகிறதல்லவா? மக்காவில் இருக்கின்ற நபி, தனக்கருகில் இருக்கின்ற உடனடிப் பிரச்சினைகளில் ஒன்றையேனும் அப்போதைக்கு தீர்க்க முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள் தான் போதிக்கும் ஏகத்துவத்திற்கு சவால் விட்டுக் கொண்டிருந்த கற்சிலைகளில் ஒன்றைக் கஃபாவிலிருந்து இறக்கவும் முடியாது; கப்பாபை அடித்த சமூகத்திடம் போய் நீதி கேட்கவும் முடியாது. இந்நிலையில் தெற்கே ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்த சன்ஆ – ஹழ்ர மௌத்திற்கிடைப்பட்ட பிரதேசத்தை அமைதிப் பிரதேசமாக்கும் ஒரு காலம் குறித்துப் பேசுகிறார்கள்.
”அல்லாஹ்வின் மீது ஆணையாக அக்காலம் வரும்” என்று நம்பிக்கையோடு உறுதிபடக் கூறுகிறார்கள். ஏனைய இடங்களைக் குறிப்பிடாமல், ஏன் சன்ஆ, ஹழ்ர மௌத்தைப் பற்றி அவர்கள் குறிப்பிட வேண்டும்? வரலாறு சொல்கிறது; அக்காலத்தில் அநீதிகளும் வன்முறைகளும் அதிகரித்துக் காணப்பட்ட பிரதேசம் அரேபியாவில் அங்குதான் இருந்தது. அந்தப் பிரதேசத்தை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அமைதிப் பிரதேசமாக மாற்ற வேண்டும் என கனவு காண்கிறார்கள். அதனை சாதிக்கும் காலம் குறித்து நன்மாராயம் சொல்கிறார்கள். மக்காவில் திரும்பிய திசைகளிலெல்லாம் அச்சுறுத்தல் அதிகரித்து இருந்ததொரு காலத்தில் இத்தகையதொரு சாதனை குறித்து நினைத்துப் பார்க்க மனம் வருமா? வருவது சாத்தியமில்லைதான், எனினும், அந்த அற்புத மனிதரின் உள்ளத்தில் அந்த சாதனை நிழலாடியது.
அந்த சாதனை உணர்வை தனது தோழரிடத்திலும் அவர்கள் ஏற்படுத்த முனைகிறார்கள். இன்றும் அவ்வாறான நம்பிக்கையோடு செயல்படுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை சில நல்ல மனிதர்களும் அனுதாபத்தோடுதான் நோக்குகிறார்கள். அல்லது ஏளனமாகப் பார்க்கிறார்கள். 150 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகத்தின் அங்கத்தவர்களிடத்தில் இத்தகையதொரு கனவு, நம்பிக்கை இல்லாமல் போனது ஆச்சர்யமில்லையா? அன்று விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் இந்த நம்பிக்கை மிக உறுதியாக இருந்தது. இன்று ஏன் அந்த நம்பிக்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் தளர்ந்து போனது? ஆராய்ந்தால் இரண்டு காரணங்கள் தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.
நல்லவர்கள் தங்களது பொறுப்புக்களை தனக்கு இணக்கமானவர்கள், நெருக்கமானவர்களோடு சுருக்கிக் கொண்டார்கள். கெட்டவர்களின் கைகளில் உலகைக் கொடுத்து விட்டு அவர்கள் ஒதுங்கி விட்டார்கள்.
முஸ்லிம் சமூகத்தையும் அதற்கப்பாலிருக்கின்ற மனித சமூகத்தையும் சிறந்த குறிக்கோள்களின்பால் இணைத்து செயல்படலாம் என்பதை அதிகமானவர்கள் அறியாமல் இருக்கின்றனர். அல்லது அவ்வாறு இணைந்து செயல்படுவதைப் பிழை என்று நம்பி இருக்கிறார்கள். அதனால் நட்டாற்றில் தனித்து விடப்பட்ட உணர்வே அவர்களை மிகைத்திருக்கின்றது. சாதனைப் பற்றி அவர்கள் கற்பனை கூடச் செய்ய முடியாது.
இங்கு சாதனைக் குறித்து நிராசை அடைந்துள்ள ஒரு சாராரைப் பற்றி நான் கூற முயற்சிக்கவில்லை. அவர்கள் இணைந்து செயல்படுவதில் நம்பிக்கயற்றவர்கள் மட்டுமல்ல, “நிச்சயமாக இணையவே மாட்டோம்; இணைந்து செயல்படுவோரை இணக்கமாக இருக்கவும் விட மாட்டோம்” என்று கங்கணம் கட்டியிருப்பவர்கள். அவர்களது பார்வையில் நபிகளார் கண்ட கனவுகள் யாவும் வெறும் கானல் நீரே. அதனை அவர்கள் நினைத்துப் பார்க்கவும் தயாராக இருக்க மாட்டார்கள்.
இந்தத் தலைப்பு அவர்களுக்காக எழுதப்பட்டதல்ல. முஸ்லிம் சமூகமும் அங்குள்ள நல்ல மனிதர்களும் படிப்பினை பெறுவதற்காகவே இது எழுதப்படுகிறது. இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனக்கு இணக்கமானவர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் மத்தியில் தனது பொறுப்புக்களைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவ்வாறு சுருக்கி இருந்தால் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள சன்ஆ பற்றி அவர்கள் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தனிமையிலிருந்தாலும் பொறுப்பைப் பாரியதாகக் கருதினார்கள். பரந்து விரிந்த ஓர் உலகின் சுபிட்சத்தை அவர்கள் விரும்பினார்கள். இந்த விருப்பத்தை வாசித்து பார்க்கவும் அவர்களால் முடிந்தது. அதனால்தான் அவர்களது உள்ளத்தில் நம்பிக்கைச் சுடர் அணையாது பிரகாசித்துக் கொண்டிருந்தது.
அது என்ன வாசிப்பு?முரண்பட்டவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருக்கும் போது இணக்கப்பாட்டைக் கொண்டு வரலாம். ஒரு நீண்ட அல்லது குறுகிய குறிக்கோளின் பக்கம் அவர்களை இணங்கச் செய்யலாம்; அப்போது சாதிக்கலாம். சமுதாய வாழ்வின் சுன்னாவை இவ்வாறு படித்து வாசிக்கத் தெரிந்தவர்களுக்குத் தான் சாதிக்கலாம் எனும் தைரியம் வரும். குறைஷித் தலைவர்களோடு ஒரு விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உடன்படவில்லை. அதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார்கள். அதுதான் “நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்” என்பதாகும். எனினும், “உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்” என்பதில் அவர்கள் அப்போதைக்கு உடன்பட்டார்கள். நான் உங்களிடம் இரத்த உறவைத் தவிர, வேறு எதனையும் கேட்கவில்லை என்ற வேண்டுகோளின் மூலம் உறவில் உள்ள உடன்பாட்டை அவர்கள் விரும்பினார்கள்.
அதனால்தான் அபூதாலிஃப் பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக அவரது கோத்திரமும் சேர்ந்து (இஸ்லாத்தை ஏற்காத நிலையிலும்) பகிஷ்கரிப்பை ஏற்றுக் கொண்டது. அதுமட்டுமல்ல, தனது உன்னத பண்பாடுகள் மூலம் ஏகத்துவத்தை மறுத்த அனைவரோடும் மனித நேயம் எனும் உறவைப் பேணி அவர்கள் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதனால் தான் மன்னன் ஹிர்கல் நபிகளாரைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு அப்போதைய எதிரியாக இருந்த அபூசுஃப்யான் நபிகளார் பற்றிய உண்மையான தகவல்களை மறைக்காமல் கூற வேண்டியிருந்தது. ஏகத்துவத்தை மறுத்தவர்களோடு பேணி வந்த இந்த மூன்று உடன்பாடுகள் காரணமாகவே சாதிக்கும் தனது பாதையில் தடைக் கற்கள் ஏற்படாது அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். இது மக்காவில்…மதினாவுக்குச் சென்ற போது அங்கு அன்னாரோடு முரண்பட்ட இரு சமூகங்கள் இருந்தன.
1. யூதர்கள்: இவர்கள் நபிமார்களோடு போரிட்டவர்கள். நபிமார்களைக் கொலை செய்தவர்கள். அத்தகையவர்களோடும் நபியவர்கள் உடன்பாட்டுக்கு வந்தார்கள். ‘மதினா சாசனம்’ அவர்களோடு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும். சுமார் 50க்கும் அதிகமான ஷரத்துக்கள் அதிலிருந்தன. மதினாவின் பாதுகாப்பு யூதர்களினதும் முஸ்லிம்களினதும் பாதுகாப்பு என்பன உள்ளிட்ட உடன்பாடுகள் அதில் நிறைய இருக்கின்றன. ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுடன் உடன்பாடுகளும் இணக்கமும் அன்னாருக்குத் தேவைப்பட்டன. குர்ஆன் அவர்களை, ‘வேதத்தை உடையவர்களே!’ என்று கண்ணியம் கொடுத்து அழைத்தமை; நாங்களும், நீங்களும் வேதம் சுமத்தப்பட்டவர்கள் என்ற உடன்பாட்டை வலியுறுத்துவதாக இருக்கவில்லையா?
2. நயவஞ்சகர்கள்: இவர்கள் வெளிப்படையில் முஸ்லிம்களாகவும் அந்தரங்கத்தில் இஸ்லாத்தின் எதிரிகளாகவும் இருந்தனர். இவர்கள் யார் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் இனங்காட்டி இருந்தான். அத்தகையவர்களின் பெயர்களை நபியவர்கள் வெளியிடவில்லை. ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மாத்திரம் நயவஞ்சகர்களின் பெயர் பட்டியலை நபியவர்கள் வழங்கியிருந்தார்கள். அவர்களும் அதனை வெளியிடவில்லை. அந்தப் பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் நபித் தோழர்களிடம் இருக்கவில்லை. மாறாக, நான் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளேனா? என்ற கவலைதான் அவர்களிடம் இருந்தது.
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நெருங்கி நானும் அந்தப் பட்டியலில் ஒருவனா? என்று விசாரித்துக் கொண்டார்கள். “இல்லை” என்றவுடன் திருப்தியடைந்தார்கள். இஸ்லாமிய இன்பப் பயணத்திற்கு இத்தகைய உடன்பாடுகள் இன்றியமையாதவை என்பதை அண்ணலாரின் முன்மாதிரிகளிலிருந்து படிக்காதவர்கள் இஸ்லாமியப் பணி செய்வதற்கு அருகதையற்றவர்கள்.
இவை மட்டுமா? சிறிய சிறிய கோத்திரங்களோடு எண்ணிலடங்காத உடன்படிக்கைகளை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செய்துள்ளார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையிலும் கூட. ஹுதைபிய்யா உடன்படிக்கையில் இஸ்லாத்தின் அடிப்படைகள் எழுத்தில் வருவதைக் கூட விரும்பாத அந்தக் குறைஷிகளோடு அத்தனை உடன்பாடுகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வந்தார்கள். ஏன்? அதுதான் சாதனைகளையும் சமூக மாற்றங்களையும் காண விரும்பும் பாதையின் இயல்பு என்பதை அன்னார் அறிந்திருந்தார்கள். பேரரறிஞர்களையும் இஸ்லாமிய இயக்கங்களையும் நரகத்திற்கு அனுப்பி விட்டுத்தான் உலகில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டியிருப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். நல்லவர்கள் கூட நபியவர்களின் இந்த முன்மாதிரியைப் புரியாமல் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! நல்லவர்களே, உங்களுக்குத்தான் இந்தச் செய்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக