குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத்தான் போவோம்... கால மாற்றங்கள் எவ்வளவோ வந்தாலும், இன்றைக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது குடம். ஒரு காலத்தில் பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம் என்று இருந்தது போய், இப்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் குடம் பிடித்துவிட்டது. எடை குறைவானது, பயன்படுத்துவதற்கு சுலபம், விலை மலிவோ மலிவு என்பதால் கிடைத்த மவுசு இது!
சந்தை வாய்ப்பு!
தமிழகம் முழுக்கவும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களிலும் பிளாஸ்டிக் குடங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. குறைந்த வருமானம் ஈட்டும் மக்களால் குறைந்த செலவில் குடம் வாங்க முடியும் என்பதுவே இதன் பிளஸ்.
முதலீடு!
இத்தொழிலை பொறுத்தவரையில் முதலீடு சுமார் 13 - 15 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இதில் நிறுவனரின் பங்காக 4.20 லட்சம் ரூபாய் கையிலிருந்து முதலீடாகப் போட வேண்டும்.
கட்டடம்!
சுமார் 1,500 - 2,500 சதுர அடியில் நிலம் தேவைப்படும். குடம் தயாரிக்க ஆகும் இடத்தைவிட அதை ஸ்டோர் செய்து வைக்க அதிகளவில் இடம் தேவைப்படும்.
உற்பத்தித் திறன் மற்றும் மின்சாரம்!
ஒரு ஷிப்டுக்கு சுமார் 500 - 600 குடங்கள் வரை தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 1.68 லட்சம் குடங்கள் தயாரிக்க ஆகும் முதலீடு மற்றும் மற்ற விவரங்களை இங்கே தந்திருக்கிறோம்.
மூலப் பொருள்!
குடம் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள் பிளாஸ்டிக்தான். இதற்கான பிளாஸ்டிக்கை கெயில் (நிணீஹ்றீமீ), அல்பியா (கிறீதீவீணீ) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் கெயில் என்பது இரண்டாம் ரக பிளாஸ்டிக். இந்த ரக பிளாஸ்டிக் மூலம் குடம் செய்தால் அதில் பிளாஸ்டிக் வாடை அதிகம் வர வாய்ப்புண்டு. அல்பியா என்பது முதல் ரக பிளாஸ்டிக். இந்த இரண்டு பிளாஸ்டிக்கின் விலை ஒரு கிலோ 81-83 ரூபாயில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருளும் சென்னையிலேயே கிடைக்கிறது.
இயந்திரம்!
இத்தொழிலை ஆரம்பிக்க குறைந்தது நான்கு இயந்திரங்கள் தேவை. எக்ஸ்ட்ரூடர், மிக்ஸர், கிரைண்டர் மற்றும் கம்ப்ரஸ்ஸர் போன்றவையே அந்த நான்கு இயந்திரங்கள். இவை சென்னையிலேயே கிடைக்கிறது. விலை ஆறு முதல் ஏழு லட்சத்திற்குள் அடங்கும். வெளிநாடுகளிலிருந்தும் இந்த இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் தயாராகும் இயந்திரங்கள் நன்றாக இருப்பதாகவே சொல்கிறார்கள் இத்தொழிலில் இருப்பவர்கள்.
தயாரிப்பு முறை:
மிக்ஸர்!
குடம் தயாரிப்பின் முதல் வேலையை இந்த மெஷின் செய்கிறது. மூலப் பொருளை இந்த மிக்ஸர் மெஷினில் போட்டு சூடேற்ற வேண்டும். இந்த மெஷினை கையாள ஒருவர் இருந்தால் போதும்.
எக்ஸ்ட்ரூடர்!
இது குடம் தயாரிப்பின் இரண்டாம் நிலையாகும். மிக்ஸர் மெஷினில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக்கை இதில் இருக்கும் வெப்பமூட்டிக் கருவிகள் இந்த பிளாஸ்டிக்கை குடம் செய்ய ஏதுவாக கூழ்ம நிலைக்கு கொண்டு வரும். இந்த கூழ்ம நிலையில் வெளிவரும் பிளாஸ்டிக்கை தேவையான அளவுகளில் இருக்கும் டை (வடிவமைப்பு வார்ப்பு) மூலம் குடமாக மாற்றுகிறார்கள். டையின் அளவு மாறுபாட்டுக்கு ஏற்ப குடத்தின் அளவும் மாறுபடும். இந்த டையின் மதிப்பு 50,000 ரூபாய் ஆகும். இந்த டையை கையாள குறைந்தது இரண்டு பேர் அவசியம் தேவை.
கம்ப்ரஸ்ஸர்!
கம்ப்ரஸ்ஸரில் இருந்து வெளிவரும் காற்றானது டையுடன் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கூழ்மத்தைக் குடமாக மாற்றுகிறார்கள்.
கிரைண்டர்!
கிரைண்டர் என்பது குடம் உற்பத்தி செய்து முடிந்தபிறகு கிடைக்கும் கழிவுப் பொருளை மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கப் பயன்படும் மெஷின் ஆகும். குடம் உற்பத்தியில் கிடைக்கும் கழிவு பிளாஸ்டிக்குகள் இந்த கிரைண்டர் மூலம் துண்டு துண்டாக ஆக்கப்படுகிறது. இந்த துண்டுகள் மீண்டும் இரண்டாம் ரக பிளாஸ்டிக் குடத் தயாரிப்பிற்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
பிளஸ்!
மூலப் பொருளை கொஞ்சம்கூட வீணாகாதபடிக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சியும் செய்து கொள்ள லாம். மூலப் பொருளின் விலையிலும் ஏற்ற இறக்கம் அவ்வளவாக இருக்காது.
மைனஸ்!
இயந்திரங்களை வைப்பதற்கும், தயாரிக்கப் பட்ட குடங்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கும் அதிகளவில் இடம் தேவைப்படும்.
வேலையாட்கள்!
திறமையான வேலையாட்கள் - 3
சாதாரண வேலையாட்கள் - 3
மேலாளர் - 1
விற்பனையாளர் - 1
அக்கவுன்டன்ட் - 1
வாட்ச்மேன் - 2 என,
மொத்தம் 11 பேர் தேவை.
கூடுதல் வாய்ப்பு!
பிளாஸ்டிக் குடம் தயாரிப்பது போல் மண்ணெண் ணெய் வாங்கவும் மற்றும் இதர திரவப் பொருட்களை நிரப்பி வைக்கவும் பயன்படும் பிளாஸ்டிக் கேன்களையும் தயாரிக்கலாம். இதற்கு தேவை கேன் தயாரிப்பதற்கான டை மட்டுமே. தண்ணீருக்கான தேவை இருக்கும் வரை குடத்திற்கான தேவையும் இருக்கும். பெரிய நகரங்கள் அல்லாமல் சின்னச் சின்ன ஊர்களிலும் இந்தத் தொழிலை தொடங்கி நடத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக