வழுக்கைக்கு குட் பை!



ரோக்கியத்துக்கும் ஒருபடி மேலாக அழகுக்கு அக்கறை செலுத்தும் காலம் இது! அந்த வகையில், ஆண் - பெண் இருவருக்குமே 'தலை’யாயப் பிரச்னையாக இருப்பது தலைமுடி பராமரிப்பு!
ஆண்களுக்கு 'வழுக்கை விழுவதும்’ பெண்களுக்கு 'முடி உதிர்வதும்’ தீராத தலைவலி! விளம்பரங்களைப் பார்த்து விதவிதமான ஷாம்பூ வகைகளைத் தேடிப் பிடித்து வாங்கித் தலையில் தேய்த்துக் கொள்வது, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அறுவைச் சிகிச்சை செய்துகொள்வது... என்று முடிவில்லாமல் தொடர்கிறது 'முடி’ப் பிரச்னை!
'சாதாரணத் தலைமுடிப் பிரச்னைக்கு இந்தளவிற்கு யாராவது தலையைப் பிய்த்துக் கொள்வார்களா என்ன?’ என்ற சந்தேகக் கேள்வி இங்கு எழலாம். ஆனால், வழுக்கைப் பிரச்னையால், முதலில் தலைமுடியை இழந்து.... தோற்றப் பொலிவின்மை, மன உளைச்சல், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை... என அடுத்தடுத்து பல்வேறு மனச் சங்கடங்களுக்குள் சிக்கி சரிவுக்குள்ளானவர்களின் பட்டியல் மிக நீளமானது.

தொழிற்துறைகளில் சாதனைகள் பல படைத்த ஜாம்பவான்கள் கூட, தங்களது வழுக்கைப் பிரச்னைக்கு சரியானத் தீர்வு கிடைக்காத விரக்தியில், மன உளைச்சலுக்கு ஆளாகி, தாழ்வு மனப்பான்மையால் தொழில் மற்றும் மன ரீதியாக பெரும் சரிவைக் கண்டிருக்கிறார்கள்!

''முடியின் மீது நாம் வைத்திருக்கும் மூட நம்பிக்கைகளை முதலில் உடைத்தெறிந்தாலே, அநாவசியச் செலவோ, உடல் உபாதையோ நிச்சயம் இருக்காது!'' என்று நம்பிக்கையை நடுகிறார் தோல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரத்னவேல்!
''தலை முடி வளர்வதற்காக மூலிகை வேர்-கீரைகள் ஊறப்போட்ட எண்ணெய்யை தேய்த்துக் கொள்வதால், எந்தப் பயனும் இல்லை; தலைக்கு எண்ணெய் தேய்ப்பதென்பது முடியைப் படிய வைப்பதற்கு மட்டுமே உதவும். இன்னும் சொல்வதானால், தலைப் பொடுகை உண்டு பண்ணும் கிருமிகள் இந்த எண்ணெய்யைத் தின்றுதான் வளர்கிறது. அதனால் பொடுகு இருப்பவர்கள் எண்ணெய் தேய்க்காமல் இருப்பதே நல்லது.

இதுதவிர கண்டிஷனர், புரோட்டீன், வைட்டமின் கலந்த ஷாம்பூ வகைகளையும் தேய்க்கிறார்கள். ஷாம்பூ வகை எல்லாமே முடியில் உள்ள அழுக்கை அகற்றத்தான் பயன்படுமே தவிர முடிக்கு எந்தவித ஊட்டச் சத்தையும் அளிக்காது. ஷாம்பூ போட்டபின் ஊறவைக்காமல், உடனே குளித்துவிடுவது நல்லது. மற்றபடி தினமும் ஷாம்பூ பயன்படுத்துவதாலோ, ஹெல்மெட் அணிவதாலோ முடி கொட்டிவிடும் என்பதில் கொஞ்சமும் உண்மை இல்லை!இன்னும் சிலர் முடி வளர்வதற்கும் உதிர்வதைத் தடுப்பதற்கும் எலுமிச்சை, முட்டை, தயிர், மாவு வகைகள்..... என்று சாப்பிட வேண்டிய சத்தான உணவுப் பொருட்களை எல்லாம் அரைத்து, வழித்து தலையில், தேய்த்துக் கொள்கிறார்கள். இதனால் எந்தப் பயனும் இல்லை. சாதாரணமாக ஒரு நாளைக்கு எழுபதில் இருந்து நூறு முடிகள் வரை உதிர்வதும் முளைப்பதும் இயல்பானது.

மனித உடம்பு முழுக்க ஐந்து லட்சம் முடிகள் இருக்கின்றன. தலையில் மட்டும் ஒரு லட்சம் முடி! தினமும் குறைந்த அளவில் உதிரும் முடிகளுக்கு இணையாக அதே எண்ணிக்கையில் புதிய முடிகள் முளைக்க வேண்டும். அப்படி முளைக்காது போனால்.... அதுதான் முடி உதிர்தல் பிரச்னை. பொடுகு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் அதிக அளவில் முடி உதிரும். ஆனால், இது நிரந்தரமானது அல்ல. சத்தான உணவு வகைகள் சாப்பிட்டு உடல் நலமான பின்பு பழைய மாதிரியே அடர்த்தியாக முடி வளர்ந்துவிடும்.
ஆன்ட்ரஜன் ஹார்மோனின் ஒரு உபபொருள்தான் முன் தலையில் உள்ள முடியின் வேர்ப் பகுதியை அரித்து ஒட்டுமொத்தமாகக் காலி செய்து விடுகிறது. இதனை 'ஆன்ட்ரோ ஜெனிடிக் அலோபேசியா’ என்கிறோம். இதை மாத்திரை, பிரத்யேக தைலம் மூலம் சரி செய்யலாம். ஆனால், வழுக்கை விழ ஆரம்பித்ததுமே நிறைய பேர் செயற்கையாக முடியை நட்டுக் கொள்ளும் அறுவைச் சிகிச்சையைத்தான் செய்துகொள்கிறார்கள்; இது தேவையற்றது. ஒரு முறை முடியை நடுவதற்கு நாற்பதாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. முடியை நட்டபின்பும் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், நட்ட முடியானது உதிர்ந்து விடும். எனவே ஆயிரக்கணக்கிலான செலவு முறைகளைத் தவிர்த்து வெறும் நான்கு ரூபாய் செலவில் மாத்திரையை உட்கொண்டு சரிசெய்வதே நல்ல பலன், புத்திசாலித்தனம்''  என்றார்.

நல்ல பில்டர் யார்? நீங்களே நாடி பிடிக்கலாம்!


கடந்த இதழில் 'கரெக்ட் ரேட்டில் கட்டலாம் வீடு’ என்ற தலைப்பில் ஒரு வீடு கட்டுவதற்கு ஆகும் சரியான விலைகுறித்து மிக விரிவாக வந்திருந்த கவர்ஸ்டோரிக்கு வாசகர்களிடையே சூப்பர் வரவேற்பு.

''ஒவ்வொருத்தரும் சொல்லும் ரேட்டைக் கேட்கும்போது தலையேச் சுத்துகிற மாதிரி இருக்கும். ஆனால், இந்த கட்டுரையைப் படித்த பிறகுதான் நம்மிடம் கேட்கும் கட்டணம் நியாயமானதா, இல்லையா என்பதை 'டக்’கென்று தெரிந்துகொள்ள முடிகிறது'' என்று பாராட்டுவதில் ஆரம்பித்து, ''மணல், ஜல்லி போன்ற ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக என்ன செலவாகும் என்பதை விரிவாகச் சொல்லியிருக்கலாமே'' என்று ஆதங்கப்பட்டதுவரை வந்து குவிந்த கருத்துக்களை சொல்வதென்றால் அதற்கே தனியாக நாலு பக்கம் ஒதுக்க வேண்டியதிருக்கும்...
இப்படி பலவிதமான கருத்துக்களை வாசகர்கள் சொல்லியிருந்தாலும், நிறைய பேர்கள், ''அப்படியே நல்ல பில்டரை கண்டுபிடிப்பது எப்படி என்பதையும் சொன்னால் நன்றாக இருக்குமே'' என்று கேட்டிருக் கிறார்கள். வாசகர்களுடைய சந்தேகத்தை தீர்ப்பதைவிட வேறு என்ன வேலை நமக்கு! நல்ல பில்டர் என்பவர் யார்? அவரை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? என்பது குறித்து 'பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர் அசோசியேஷன்’ தலைவர் மணி சங்கரிடம் கேட்டோம்...
அட்ரஸ் தருகிறாரா?
''நல்ல பில்டர் என்பவர் அவரது பழைய புராஜெக்ட் களைப் பற்றி பெருமையுடன் குறிப்பிடுவார். அந்த புராஜெக்ட்களின் விவரத்தை முகவரியுடன் தந்து, அதை நேரில் பார்க்கச் சொல்லுவார். இதுவே, சவடால் பேர்வழி என்றால் 20 புராஜெக்ட்கள் முடித்துவிட்டு, 50, 100 என்று அள்ளிவிடுவார். ஆனால், புராஜெக்ட்களின் அட்ரஸை கேட்டால் தரத் தயங்குவார். உங்களுக்கு எதற்கு அதெல்லாம் என்று தட்டிக் கழிப்பார். இது மாதிரியானவர்களிடம் ரொம்பவே ஜாக்கிரதையாக இருங்கள்.  
சிபிலில் பாருங்கள்!
ஃபிளாட்டை ஒன்றுக்கு இரண்டு முறை நேரில் பார்க்காமல் அட்வான்ஸ் கொடுப்பது தவறு. அதிலும் பட்டப்பகலில் ஃபிளாட்டை பார்ப்பது அவசியம்.  வெளித்தோற்றம் எப்படி இருக்கிறது? நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதா? உள்வடிமைப்பு எப்படி இருக்கிறது? என்பதை பார்த்து, அவர் ஏற்கெனவே விற்ற விலை நியாயமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த ஃபிளாட்டை கட்டிய பில்டர் பற்றி பில்டர்கள் வட்டாரத்தில் விசாரித்து தெரிந்து கொள்வதும் நல்லது'' என்றவர், ஒரு பில்டர் நியாயமானவர்தான் என்பதை சட்டப்படி உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறையை யும் விளக்கிச் சொன்னார்.
''பில்டர்/புரமோட்டரின் பான் கார்டு நம்பர், சேல்ஸ் டாக்ஸ் நம்பர், சர்வீஸ் டாக்ஸ் நம்பர் போன்றவற்றை வாங்கி அந்த பில்டர் உண்மையிலேயே வரிகளை எல்லாம் சரியாக கட்டி வருகிறாரா என்பதை பரிசோதித்துக் கொள்வது நல்லது. பான் நம்பர் மூலம் அந்த பில்டர் கடன் ஏதாவது வாங்கிவிட்டு, பாக்கி வைத்திருக்கிறாரா அல்லது கடனை சரியாக கட்டாதவர்களின் பட்டியலில் ('சிபில்’) அவர் பெயர் இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். பில்டர் தரும் பான் நம்பர் மூலம் அவர் நடத்தும் நிறுவனம் அவரது பெயரில்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். பல பில்டர்கள், வேறு ஒருவரின் பான் எண்ணை தந்துதான் தொழில் செய்து வருகிறார்கள்.
வரி வரலாறு முக்கியம்!

காசோலைதான் கரெக்ட்!
இதை எல்லாம் ஏன் பார்க்க வேண்டும்? ஒரு பில்டர் இதுவரை 50 புராஜெக்ட்கள் முடித்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர் ஆரம்பித் திருக்கும் 51-வது புராஜெக்ட்டில் நீங்கள் ஒரு ஃபிளாட் வாங்க அட்வான்ஸ் தருகிறீர்கள். இதற்கிடையில் அந்த பில்டர் ஏதாவது சிக்கலில் மாட்டினால் நடப்பு புராஜெக்ட்களுக்கான சொத்து முடக்கப்படும் அல்லது பறிமுதல் செய்யக்கூடிய நிலைகூட உருவாகும்! எனவே, பில்டரின் வரி வரலாறு மிக முக்கியம். பில்டர் - வாங்குபவர் அக்ரிமென்டின்படி அவரது பழைய புராஜெக்ட்களை தரமாகக் கட்டிக் கொடுத்திருக் கிறாரா என்பதைக் கவனிப்பது அவசியம்!

பணம் கொடுக்கும்போது முழுக்க முழுக்க ஒயிட்டிலேயே கொடுப்பது மிக, மிக அவசியம். உதாரணத்துக்கு, 50 லட்ச ரூபாய் என்றால் 30 லட்ச ரூபாயை காசோலையாகவும், மீதி 20 லட்ச ரூபாயை பிளாக்காகவும் (ரொக்கப் பணம்) கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சில வருடம் கழித்து 50 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய வீடு உள்ள இடம் வேறு ஒருவருக்குச் சொந்தமானது என வழக்குப் போடப்பட்டு, சொத்து கைமாறுகிறது என்றால் வீட்டை வாங்கியவருக்கு கோர்ட் இழப்பீடு கொடுக்கச் சொன்னால், வெள்ளையாக கொடுத்த 30 லட்ச ரூபாய்தான் கிடைக்கும். அதனால் பில்டர்/புரமோட்டருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து தொகையையும் காசோலையாகக் கொடுப்பது தான் சரி.
மேலும், காசோலை கொடுக்கும்போது பில்டரின் கம்பெனி பெயர், வங்கி பெயர் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணை காசோலையில் எழுதிக் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் ஒரு காசோலையை பில்டர் அவரின் ஒரு வங்கி கணக்கிலும், இன்னொரு காசோலையை அவரது மற்றொரு வங்கிக் கணக்கிலும் போடும் பட்சத்தில் உங்களிடமிருந்து வாங்கிய முழுத் தொகையையும் கணக்கில் காட்டாமல் போக வாய்ப்பு இருக்கிறது. இதனால், பிற்காலத்தில் ஏதாவது பிரச்னை வந்தால் நீங்கள் கொடுத்த தொகை கணக்கிலேயே வராமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.'' என்றவர், பில்டருடன் பிரச்னை என்றால் எப்படி தீர்த்துக் கொள்வது என்பதையும் விளக்கினார்.
பிரச்னை வந்தால்...
''பெரும்பாலான பில்டர்கள், அவர்களுக்கு என்று இருக்கும் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஏமாற்றும் பில்டர்கள் பற்றி அந்த சங்கத்தில் புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள். இதேபோல், சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் குறித்தும் பில்டர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தால் விசாரிப்பார்கள். அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம்'' என்றார்.
இவைபோக, கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி அவர் சொன்ன விஷயங்கள்..!
நல்ல பில்டர் என்பவர் விதிமுறைகளை கடைப் பிடிப்பவராக இருப்பார். அவர் குடியிருப்பைச் சுற்றி நாலாபுறமும் குறைந்தது 4-5 ஐந்து அடி இடம் விட்டிருப்பார். மேலும், அனைத்து தளங்களுக்கும் முறைப்படி அனுமதி வாங்கி இருப்பார்.
பல பில்டர்கள் ஃபிளாட் வாங்கும்போது ச.அடி இன்ன விலை என்று சொல்வார்களே தவிர, மொத்தச் செலவை சொல்ல மாட்டார்கள்.  சர்வீஸ் டாக்ஸ் (ஒரே இடத்தில் 12 குடியிருப்புகளுக்கு மேலே போகும்போது), போக மின் இணைப்பு, தண்ணீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு, முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம், கார் பார்க்கிங் கட்டணம் போன்றவை தனியாக இருக்கின்றன. இவற்றையும் சேர்த்து மொத்தமாகச் சொன்னால், பட்ஜெட்டை பார்த்துவிட்டு பலரும் ஃபிளாட் வாங்காமல் போய் விடுவார்களே என்கிற பயத்தில் பில்டர்கள் சொல்வதில்லை. அட்வான்ஸ் கொடுத்து, மீதி தொகையையும் கொடுத்து முடிக்கிற நிலையில்தான் மற்ற செலவுகளைச் சொல்வார்கள். ஆனால்,  நல்ல பில்டர் என்பவர் ச.அடி. விலை போக, வேறு என்னென்ன செலவுகள் எல்லாம் இருக்கிறது என்பதையும் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவார். இது, வீடு வாங்குபவரின் பட்ஜெட்டை சரியாக அமைத்துக் கொள்ள வசதியாக இருக்கும்.  
நல்ல பில்டர் என்பவர் அக்ரிமென்டில் இருக்கும் பல விஷயங்கள் குறித்து வீடு வாங்குபவர்களுக்கு விளக்கிச் சொல்பவராக இருப்பார். உதாரணமாக, சிமென்ட் விலை ஏறும் பட்சத்தில் அதில் பாதியை, தானே ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்வார். மோசமான பில்டர் என்பவர் விலையேற்றத்தை அப்படியே நம் மீது சுமத்திவிடுவார்.
நல்ல பில்டர் என்பவர் அக்ரிமென்டில் எல்லா விவரங்களையும் தெளிவாகச் சொல்லி இருப்பார். உதாரணத்துக்கு, குளியல் அறையின் கதவு நீள அகலம், கதவு எந்த மரத்தில் செய்யப்படும்? டைல்ஸ் என்ன உயரத்துக்கு வைத்து கட்டப்படும்? வாஷ்பேசின் என்ன கம்பெனி, என்ன மாடல் என்பதை எல்லாம் அக்ரிமென்டில் குறிப்பிடுவார். எவ்வளவுக்கு எவ்வளவு விலாவாரியாக விரிவாக விவரங்களைத் தருகிறாரோ அந்த அளவுக்கு அவர் நல்ல பில்டர். 'வீடு தரமாக கட்டி தரப்படும்’ என பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடுபவர் நல்ல பில்டர் இல்லை.

அறையின் உயரமும் மிக முக்கியம். சாதாரணமாக அறையின் உயரம் 10 அடி இருக்க வேண்டும். சில பில்டர்கள் 9 அடிதான் கட்டு கிறார்கள். எனவே, உஷார்.

மின்சார இணைப்பு, கழிவு நீர் மற்றும் குடி நீர் இணைப்புக்கான டெபாசிட் ரசீதுகளை கேட்காமலேயே கொடுப்பவர் நல்ல பில்டர். தராதபட்சத்தில் கேட்டு வாங்குவது மிக அவசியம்.
பில்டருக்கு நிரந்தர அலுவலகம் இருப்பது அவசியம். அப்போதுதான் பிரச்னை என்றால் பில்டரை தேடிப் போய் பேச முடியும். சில பில்டர்கள் புராஜெக்ட் வெளியீடு, அக்ரிமென்ட் முதற்கொண்டு அனைத்தையும் ஓட்டலிலேயே வைத்து முடிக்கிறார்கள். இப்படி செய்கிறவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
 மேலே தண்ணீர் தொட்டி தனித்தனியாக இருப்பது நல்லது. ஒரு நல்ல பில்டர் என்பவர் தண்ணீர் தொட்டியை தனித்தனியாகவே அமைத்து தருவார்.
கார் பார்க்கிங் வசதி இருக்கும் பட்சத்தில் அதனை பத்திரத்தில் நல்ல பில்டர் அவசியம் குறிப்பிடுவார். அதற்குரிய ஃபிளாட் எண்ணை குறிப்பிட்டு, அதன் நான்கு எல்லைகளையும் குறிப்பிடுவார். அது, கார் பார்க்கிங் செய்வதற்காகவே ஒதுக்கப்பட்ட இடம் என்பதையும் தெளிவுபடுத்துவார்.  
நல்ல பில்டர், அனைவருக்கும் பிரிக்கப்படாத மனைப் பரப்பான யூ.டி.எஸ்.-ஐ பிரித்து தருவார்.  
 வேலை முடிய முடிய பணம் வாங்குபவர்தான் நல்ல பில்டர். மொத்த பணத்தையும் முதலிலேயே கேட்டால், கவனமாக இருக்க வேண்டும்.
முடிவாக, பில்டர்தான் நம் ஃபிளாட்டைக் கட்டினாலும், அதை எப்படி கட்டுகிறார் என்பதை அடிக்கடி நேரில் போய்ப் பார்ப்பது அவசியம். 'வீடு கட்டுற வேலையைத்தான் பில்டரிடம் கொடுத்து விட்டோமே, எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்! என்று நாம் அசால்ட்டாக இருந்தால், பிற்பாடு நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!

பிளாஸ்டிக் குடம்


குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத்தான் போவோம்... கால மாற்றங்கள் எவ்வளவோ வந்தாலும், இன்றைக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது குடம். ஒரு காலத்தில் பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம் என்று இருந்தது போய், இப்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் குடம் பிடித்துவிட்டது. எடை குறைவானது, பயன்படுத்துவதற்கு சுலபம், விலை மலிவோ மலிவு என்பதால் கிடைத்த மவுசு இது!
சந்தை வாய்ப்பு!

தமிழகம் முழுக்கவும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களிலும் பிளாஸ்டிக் குடங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. குறைந்த வருமானம் ஈட்டும் மக்களால் குறைந்த செலவில் குடம் வாங்க முடியும் என்பதுவே இதன் பிளஸ்.                            

முதலீடு!
இத்தொழிலை பொறுத்தவரையில் முதலீடு சுமார் 13 - 15 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இதில் நிறுவனரின் பங்காக 4.20 லட்சம் ரூபாய் கையிலிருந்து முதலீடாகப் போட வேண்டும்.

கட்டடம்!
சுமார் 1,500 - 2,500 சதுர அடியில் நிலம் தேவைப்படும். குடம் தயாரிக்க ஆகும் இடத்தைவிட அதை ஸ்டோர் செய்து வைக்க அதிகளவில் இடம் தேவைப்படும்.  
உற்பத்தித் திறன் மற்றும் மின்சாரம்!
ஒரு ஷிப்டுக்கு சுமார் 500 - 600 குடங்கள் வரை தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 1.68 லட்சம் குடங்கள் தயாரிக்க ஆகும் முதலீடு மற்றும் மற்ற விவரங்களை இங்கே தந்திருக்கிறோம்.  
மூலப் பொருள்!

குடம் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள் பிளாஸ்டிக்தான். இதற்கான பிளாஸ்டிக்கை கெயில் (நிணீஹ்றீமீ), அல்பியா (கிறீதீவீணீ) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் கெயில் என்பது இரண்டாம் ரக பிளாஸ்டிக். இந்த ரக பிளாஸ்டிக் மூலம் குடம் செய்தால் அதில் பிளாஸ்டிக் வாடை அதிகம் வர வாய்ப்புண்டு. அல்பியா என்பது முதல் ரக பிளாஸ்டிக். இந்த இரண்டு பிளாஸ்டிக்கின் விலை ஒரு கிலோ 81-83 ரூபாயில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருளும் சென்னையிலேயே கிடைக்கிறது.
இயந்திரம்!
இத்தொழிலை ஆரம்பிக்க குறைந்தது நான்கு இயந்திரங்கள் தேவை. எக்ஸ்ட்ரூடர், மிக்ஸர், கிரைண்டர் மற்றும் கம்ப்ரஸ்ஸர் போன்றவையே அந்த நான்கு இயந்திரங்கள். இவை சென்னையிலேயே கிடைக்கிறது. விலை ஆறு முதல் ஏழு லட்சத்திற்குள் அடங்கும். வெளிநாடுகளிலிருந்தும் இந்த இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் தயாராகும் இயந்திரங்கள் நன்றாக இருப்பதாகவே சொல்கிறார்கள் இத்தொழிலில் இருப்பவர்கள்.
தயாரிப்பு முறை:
மிக்ஸர்!
குடம் தயாரிப்பின் முதல் வேலையை இந்த மெஷின் செய்கிறது. மூலப் பொருளை இந்த மிக்ஸர் மெஷினில் போட்டு சூடேற்ற வேண்டும். இந்த மெஷினை கையாள ஒருவர் இருந்தால் போதும்.
எக்ஸ்ட்ரூடர்!
இது குடம் தயாரிப்பின் இரண்டாம் நிலையாகும். மிக்ஸர் மெஷினில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக்கை இதில் இருக்கும் வெப்பமூட்டிக் கருவிகள் இந்த பிளாஸ்டிக்கை குடம் செய்ய ஏதுவாக கூழ்ம நிலைக்கு கொண்டு வரும். இந்த கூழ்ம நிலையில் வெளிவரும் பிளாஸ்டிக்கை தேவையான அளவுகளில் இருக்கும் டை (வடிவமைப்பு வார்ப்பு) மூலம் குடமாக மாற்றுகிறார்கள். டையின் அளவு மாறுபாட்டுக்கு ஏற்ப குடத்தின் அளவும் மாறுபடும். இந்த டையின் மதிப்பு 50,000 ரூபாய் ஆகும். இந்த டையை கையாள குறைந்தது இரண்டு பேர் அவசியம் தேவை.
கம்ப்ரஸ்ஸர்!
கம்ப்ரஸ்ஸரில் இருந்து வெளிவரும் காற்றானது டையுடன் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கூழ்மத்தைக் குடமாக மாற்றுகிறார்கள்.
கிரைண்டர்!
கிரைண்டர் என்பது குடம் உற்பத்தி செய்து முடிந்தபிறகு கிடைக்கும் கழிவுப் பொருளை மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கப் பயன்படும் மெஷின் ஆகும். குடம் உற்பத்தியில் கிடைக்கும் கழிவு பிளாஸ்டிக்குகள் இந்த கிரைண்டர் மூலம் துண்டு துண்டாக ஆக்கப்படுகிறது. இந்த துண்டுகள் மீண்டும் இரண்டாம் ரக பிளாஸ்டிக் குடத் தயாரிப்பிற்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
பிளஸ்!
மூலப் பொருளை கொஞ்சம்கூட வீணாகாதபடிக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சியும் செய்து கொள்ள லாம். மூலப் பொருளின் விலையிலும் ஏற்ற இறக்கம் அவ்வளவாக இருக்காது.
மைனஸ்!
இயந்திரங்களை வைப்பதற்கும், தயாரிக்கப் பட்ட குடங்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கும் அதிகளவில் இடம் தேவைப்படும்.
வேலையாட்கள்!
திறமையான வேலையாட்கள் - 3

சாதாரண வேலையாட்கள்  - 3
மேலாளர் - 1
விற்பனையாளர் - 1
அக்கவுன்டன்ட் - 1
வாட்ச்மேன் - 2 என,
மொத்தம் 11 பேர் தேவை.  
கூடுதல் வாய்ப்பு!
பிளாஸ்டிக் குடம் தயாரிப்பது போல் மண்ணெண் ணெய் வாங்கவும் மற்றும் இதர திரவப் பொருட்களை நிரப்பி வைக்கவும் பயன்படும் பிளாஸ்டிக் கேன்களையும் தயாரிக்கலாம். இதற்கு தேவை கேன் தயாரிப்பதற்கான டை மட்டுமே. தண்ணீருக்கான தேவை இருக்கும் வரை குடத்திற்கான தேவையும் இருக்கும். பெரிய நகரங்கள் அல்லாமல் சின்னச் சின்ன ஊர்களிலும் இந்தத் தொழிலை தொடங்கி நடத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது!

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்.


உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு:

பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.

இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்:

வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.
நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்:

நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு :

வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள் :

பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி :

நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறால் மீன் மற்றும் நண்டு :

அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர் : தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி :

சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் :

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள்
முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.
இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

தகவல் அறியும் உரிமை சட்டம்-4


எந்த ஒரு இந்தியக்குடிமகனும் இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெறலாம்.

•இந்தச்சட்டம் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

•அயல்நாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெறலாம்.

•இந்திய குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தகவல் பெறும் உரிமைக்காக தங்களது விண்ணப்பங்களை, அந்தந்த நாடுகளில் உள்ள நமது நாட்டின் தூதரக அலுவலகங்களில் தேவையான கட்டணத் தொகை மற்றும் அதை செலுத்தும் முறை பற்றி அறிந்துக் கொள்ளலாம்.

மத்திய அரசின் கீழ்க்கண்ட காவல்துறை மற்றும் இதரத்துறை பிரிவுகளிடம் தகவல் கோரும் உரிமை மறுக்கப்படுகிறது.


1.புலனாய்வு துறை (Intelligence Bureau)

2.மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவு (Research & analysis wing of cabinet secretariat)

3.வருவாய் புலனாய்வு இயக்ககம் (Directorate of Revenue Intelligence)

4.மத்திய பொருளாதார புலனாய்வுதுறை (Central Economic Intelligence Bureau)

5.அமலாக்கப் பிரிவு இயக்ககம் (Directorate of Enforcement)

6.போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (Narcotic Control Bureau)

7.வான் ஆராய்ச்சி நிலையம் (Aviation Research Centre)

8.சிறப்பு எல்லைப் படை(Special Frontier Force)

9.எல்லைப் பாதுகாப்பு படை (Border Security Police)

10.மத்தியக் தனிக் காவல் படை (Central Reserve Police Force)

11.இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படை(India-Tibetan Border Police)

12.மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force)

13.தேசிய பாதுகாப்பு காவலர்கள் (National Security Guards)

14.அஸ்ஸாம் துப்பாக்கி அணி (Assam Rifles)

15.சிறப்பு பணிகளுக்கான துறை (Special Service Bureau)

16.சிறப்பு துறை (குற்றவியல் புலனாய்வு துறை - அந்தமான் நிகோபார்)

17.குற்றவியல் துறை (குற்றவியல் புலனாய்வு)- 
நாகர் ஹவேலி - Nagar Haveli

18.சிறப்பு பிரிவு - லட்ச தீவு 

மேற்கண்ட பிரிவுகளிடமிருந்து தகவல் கோருவது நாட்டின் பாதுகாப்பை, அயல்நாட்டு உறவுகளை, அரசு நிர்வாகத்தை பாதிக்கும் என்பதால் மத்திய அரசு தகவல் கொடுக்க மறுக்கும்.

தகவல் அறியும் உரிமை சட்டம்-3


தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தகவல் அறிய சமர்ப்பிக்கப்படும் முதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்



1. முதல் மேல்முறையீட்டை எப்போது செய்வது


பொதுத்தகவல் அதிகாரி (Public Information Officer (PIO)) நீங்கள் கேட்ட தகவலைத் தர மறுத்து உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கும்போது.
நீங்கள் கேட்ட தகவலை பொதுத்தகவல் அதிகாரி 48 மணி நேரம் அல்லது 30 நாள்களுக்குள் தராத போது.
துணை பொதுதகவல் அதிகாரியினை பணியமர்த்தாத போது/பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளாத போது அல்லது நீங்கள் கேட்கும் தகவலைத் தராத போது.
துணை பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தை நிராகரித்து அதனை பொதுத்தகவல் அதிகாரிக்கு அனுப்ப மறுக்கும் போது.
பொதுத்தகவல் அதிகாரியின் தீர்ப்பு குறித்து நீங்கள் திருப்தியடையாதபோது
உங்களுக்காகத் தரப்பட்ட தகவல் போதுமானதாக (அ) தவறானதாக (அ) தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாக இருக்கும்போது.
தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் விண்ணப்பத்திற்கான கட்டணம் அதிகமென்று நீங்கள் எண்ணும் போது



2.முதல் மேல் முறையீட்டு விண்ணப்பத்தினை அனுப்ப உள்ள கால அவகாசம்
கூறப்பட்டுள்ள, காலாவதியாகிய நாளிலிருந்து 30 நாட்களுக்குள், அல்லது மாநில பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து தகவல் பெற்ற (தீர்ப்பு அல்லது வேண்டுகோள் நிராகரிப்பு) பின், (SPIO) அல்லது மத்தியப் பொது தகவல் அதிகாரியிடமிருந்துத் தகவல் பெற்றபின் (CPIO).
மேல்முறையீடு (Appellate) தொடர்பான அதிகாரி, மேல்முறையீட்டாளர் தனது மனுவினைப் பதிவு செய்யமுடியாமல் தடுக்கப்பட்டார் என்று உணர்ந்தால், மேல் முறையீட்டாளரின் மனுவினை 30 நாட்கள் கடந்த பின்னரும் பெற்றுக்கொள்ளலாம்.



3.முதல் மேல்முறையீட்டு மனுவினை எழுதுதல்
விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் எழுதலாம் அல்லது விண்ணப்பம் கையால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; அல்லது தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விண்ணப்பம் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது எழுதப்பட்டிருக்க வேண்டும்.
தேவையான தகவலை அதற்குரிய படிவத்தில் தெளிவாகத் தரவேண்டும்.
சுய ஒப்பமிட்ட (self attested) விண்ணப்பத்தின் நகலையும் விண்ணப்பத்திற்கான கட்டணம் தரப்பட்ட சான்றையும், பொதுத்தகவல் அதிகாரியிடம் பெறப்பட்ட விண்ணப்பத்திற்கான ரசீதையும், தீர்ப்பின் நகலையும் விண்ணப்பத்துடன்/மனுவுடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகலையும் வைத்துக்கொள்ளவும்.



4.எங்கு முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிப்பது?
பொதுத்தகவல் அதிகாரி இருக்கும் அதே அலுவலகத்திலுள்ள முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority) இடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நிறுவன நிலைமுறைப்படி (hierarchy) முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி பொதுத்தகவல் அதிகாரியைவிட உயர் பதவியிலிருப்பவராவார். எனவே, மேல் முறையீட்டு விண்ணப்பத்தினைப் பெறவும், தேவைப்படும் விவரங்களைத் தரவும் அல்லது மேல் முறையீட்டினை நிராகரிக்கவும் அவருக்கு உரிமையுள்ளது.
முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்கும் முன், முதன்மை மேல் முறையீட்டு அதிகாரியின் பெயரையும், குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தையும் கட்டணம் செலுத்துவதற்குரிய முறையையும் தெரிந்து கொள்ள வேண்டும். (சில மாநிலங்களில் முதல் மேல் முறையீட்டு மனுவுக்கென கட்டணம் வசூலிக்காதபோதும், சில மாநிலங்களில் முதல் மேல் முறையீட்டு மனுவை இலவசமாகவே பெற்றுக்கொள்கின்றன.)



5.முதல் மேல் முறையீட்டு மனுவை எவ்வாறு அனுப்புவது?
பூர்த்தி செய்யப்பட்ட மனுவை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தரலாம்.
அஞ்சல் மூலம் மனுவை அனுப்ப நேரிட்டால் பதிவுத்தபாலில் அனுப்பவும். கூரியர் தபாலைத் (courier service) தவிர்க்கவும்.
நேரடியாகக் கொடுத்தாலும், அஞ்சல் மூலம் அனுப்பினாலும் இரண்டிற்கு ரசீதினைப் பெற்றுக்கொள்ளவும்.


6.தகவல் பெறக்கூடிய கால
பொதுவாக சாதாரண வழக்குகளில் 30 நாட்களிலும், விதிவிலக்காக உள்ள வழக்குகளுக்கான மனுக்களுக்கான பதிலை 45 நாட்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority (FAA)), மேல் முறையீட்டு மனுவைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து நேரம்/காலம் கணக்கிடப்படும்.

தகவல் அறியும் உரிமை சட்டம்-2


தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் தகவல் அறிய வேண்டுகோள் 

1.எந்த பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தேவைப்படும் தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (அரசு நிறுவனம்/அரசு உதவிபெறும் நிறுவனம்)

2.விண்ணப்பம் கைகளால் எழுதப்படலாம் அல்லது தட்டச்சு செய்யப்படலாம்.
...
3.விண்ணப்பங்கள் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது சமர்ப்பிக்கலாம்

4.பின்வரும் தகவல்களோடு மனுவை தரவேண்டும்.

i.மனுவைப் பெற்றுக்கொண்ட துணை பொதுதகவல் அதிகாரி (APIO) அல்லது பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர்.

ii.பொருள்: தகவல் அறியும் சட்டம் பகுதி 6(1) இன் படி மேல் முறையீட்டுக்கான விண்ணப்பம்.

iii.பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்கும் தகவல்கள்.

iv.விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர்
v.பிரிவு SC, ST & OBC

vi.விண்ணப்பக் கட்டணம்.

vii.வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் (BPL) வசிப்பவரா? ஆம்/இல்லை

viii.கைபேசி எண் (mobile no) மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் (இரண்டும் கட்டாயமில்லை) அஞ்சல் முகவரி.

ix.தேதி மற்றும் இடம்.

x.மனுதாரரின் இடம்.

xi.மனுதாரரின் கையொப்பம்

xii.இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியல்..

6.மனு செய்வதற்குமுன் துணை பொதுதகவல் அதிகாரி/பொதுத்தகவல் அதிகாரியின் பெயர், கூறப்பட்டுள்ள கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய முறை ஆகியனவற்றைச் சரிபார்த்துக்கொள்ளவும்.

7.தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் அறியும் மனுவினுக்கான கட்டணம் இருந்த போதிலும், தாழ்த்தப்பட்டவர்கள், மலைஜாதியினர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள் ஆகியோருக்கு மனுவினைப்பெற கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

8.கட்டண விலக்கு வேண்டுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், மலை சாதியினர் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர்கள் என்பதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டும்.

9.மனுக்களை நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கலாம். அஞ்சலில் அனுப்புவதாக இருப்பின் பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். கூரியர் மூலம் (courier) அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும்.

10.விண்ணப்பம்/மனுவினை இரண்டு நகல் எடுக்கவும். (அதாவது, மனு, பணம் கட்டியதற்கான ரசீது, நேரில் அல்லது அஞ்சலில் மனு அனுப்பப்பட்டதற்கான ஆதாரம் ஆகியன) அவைகளை பின்னாள் ஒப்பிடுதலுக்காக (future reference) பத்திரமாக வைத்திருக்கவும்.

11.நேரில் உங்களது மனுவை சமர்ப்பித்திருந்தால் அலுவலகத்தில் தேதியும் முத்திரையும் கூடிய ரசீதைப்பெற்று மிகக் கவனமாக வைத்திருக்கவும்.

12.கேட்ட தகவலைத் தரவேண்டிய காலம், பொதுத் தகவல் தொடர்பு அதிகாரி மனுவை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து தொடங்குகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டம்-1

 தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?

மாதிரிக் கேள்விகள் (உங்களது விருப்பத்திற்கேற்றாற்போல, தேவைப்படும் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்)

1. எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தேதிவாரியாகக் குறிப்பிடும்படி வேண்டுகிறேன். உதாரணமாக, எனது விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் எப்போது, எந்த அதிகாரியிடம் போய்...ச் சேர்ந்தது? அந்த அதிகாரியிடம் எவ்வளவு காலம் இருந்தது? இந்த காலகட்டத்தில் அவர் அதன் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்?.

2. எனது விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு/புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர் என்ன? அவர்களது பதவிகளின் பெயர்கள் என்ன? ஏதாவதொரு அதிகாரி நடிவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறாரா?

3. தங்களது பணியைச் செய்யாமல் பொதுமக்களைத் தொந்திரவுற்கு உள்ளாக்கும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடிவடிக்கை எடுக்க முடியும்? இந்த நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலமாகும்?


4. இப்போதைய நிலையில் எனது வேலை எப்போது முடியும்?

5. என்னுடைய விண்ணப்பம்/கணக்குத் தகவல் அறிக்கை/மனு/புகார் உங்களால் பெற்றுக் கொண்ட பின்னர், உங்களிடம் விண்ணப்பம்/கணக்குத்தகவல் அறிக்கை/மனு புகார்/ ஆகியவற்றைக் கொடுத்த அனைத்து நபர்களின் பட்டியலையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். இந்தப் பட்டியலில் கீழ்க்கண்ட தகவல்கள் இருக்கவேண்டும்.

*விண்ணப்பதாரரின்/வரிசெலுத்துபவ​ரின்/மனுதாரரின்/பாதிக்கப்பட்டவ​ரின் பெயர் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட ரசீதின் எண்.

* விண்ணப்பம்/கணக்கு தகவல்அறிக்கை/மனு/புகார்-ன் தேதி.

* அவருக்கான பிரச்சினை தீர்க்கப்பட்ட தேதி.

6. மேற்படி விண்ணப்பங்கள்/கணக்குத்தகவல் அறிக்கைகள்/மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் அவற்றுக்கான வழங்கப்பட்ட ரசீதின் (பெறுகை ஒப்புதல் சீட்டு) எண் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள் அல்லது அச்சுப் பிரதிகளை தயவு செய்து வழங்கவும்.

7. எனது மனுவை நீங்கள் பெற்றுக் கொண்ட பின்னர், பெறப்பட்ட விண்ணப்பங்கள்/கணக்குத் தகவல் அறிக்கைகள்/ மனுக்கள்/புகார்கள் ஆகியவற்றில் எதிலேனும் வரிசைக்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதையும், அதற்கான காரணங்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

8. இவ்வாறு நடந்திருந்தால் இது குறித்து எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைக்கான விசாரனை எப்போது நடைபெறத் தொடங்கும்?



தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட காவல்துறை பிரிவுகளுக்கு தகவல் அளிக்கும் கட்டுப்பாட்டில் இருந்து விதிவிலக்கு அளித்துள்ளது.



1.சிறப்பு பிரிவு - குற்றப்புலனாய்வு 

2.க்யூ பிரான்ச் - குற்றப்புலனாய்வு 

3.சிறப்பு பிரிவு 

4.பாதுகாப்பு பிரிவு 

5.முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு பிரிவு (கோர் செல் சி ஐ டி)

6.மாவட்ட சிறப்பு பிரிவு 

7.போலீஸ் கமிஷனர் ஆணையக உளவுப் பிரிவு 


8.சிறப்பு உளவுப் பிரிவு

9.கமிஷனர் ஆணையகம் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு பிரிவு 

10.நக்சலைட் சிறப்பு பிரிவு

11.குற்றப் பிரிவு சி ஐ டி.

12.விஷேசப் புலனாய்வு பிரிவு 

13.திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு 

14.போதைப் பொருள் தடுப்பு உளவுப் பிரிவு 

15.கொள்ளை தடுப்பு பிரிவு 

16.பொருளாதார குற்றப் பிரிவு

17.சிலை திருட்டு தடுப்பு பிரிவு 

18.வணிகக் குற்றப் புலனாய்வு பிரிவு 

19.சிவில் சப்ளை சி ஐ டி

20.சைபர் க்ரைம் செல்

21.மாவட்ட குற்றப் பிரிவு மற்றும் நகர குற்றப் பிரிவு

22.சிறப்பு அதிரடிப்படை 

23.தமிழ்நாடு கமாண்டோ படை

24.தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளி

25.கடலோரப் பாதுகாப்பு படை

26.போலீஸ் ரேடியோ பிரிவு 

மூட நம்பிக்கை



                                                     
அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}  

இறைவன் கூறுகிறான் !நான் நாடியதை தவிர வேறொன்றும் உங்களை அணுகாது ! [அல்குர்ஆன் 9:50,51] 
                                                                                       
அல்லாஹ்  விதித்ததை தவிர வேறொன்றும் எங்களை அணுகாது.
அவன்தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று நபியே!நீர் கூறும்,
இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்வின்  மீதே பரிபூரண நம்பிக்கை 
வைப்பார்கள். [அல்குர்ஆன் 9:50,51] 
மேலும்  அல்லாஹ் கூறுகிறான் !

பூமியிலோ  அல்லது  உங்கள் வாழ்விலோ நிகழ்கின்ற எந்தச் சம்பவமும்,
அதனை நாம் நிகழச் செய்வதற்கு முன்னரே{ லவ்ஹுள் மஹ்பூல்}என்ற 
பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இல்லாமல் அதை நிகழச்செய்வதில்லை.
நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

உங்களை விட்டுப் தவறிப் போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் 
இருக்கவும்,அவன் உங்களுக்கு அளித்தவற்றில் மீது நீங்கள்{அளவுக்கு மீறி}
மகிழாதிருக்கவும்.[இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்.}
கர்வம் கொண்டவர்கள்,தற்பெருமை கொண்டவர்கள் ஆகிய எவரையும் 
அல்லாஹ் நேசிப்பதில்லை.{அல்குர்ஆன் {57;22;23}

மேற்கண்ட ஆயத்கள் மூலம்  அபசகுனம் என்று ஏதும் இல்லை.நடப்பவை 
அனைத்தும் அல்லாஹ் முன்னரே ஏற்படுத்திய ஏற்பாட்டின்படியே 
நடக்கின்றன என்று அறிய முடிகிறது .

சிலபேர் பால்கிதாபு பார்க்கிறோம் என்று  கூறிக்கொண்டு
ஆடு, மாடு, மனிதர்கள், பொருட்கள் காணாமல் போனால்,வியாபாரம் ,நோய் வந்தால்,அல்லது தமது தேவைகள் நிறைவேற வேண்டி ஒருவரிடம் சென்று கேட்கிறார்கள்.

அவர் ஏதோ ஒரு புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு வந்து 
அதிலுள்ள கட்டங்களில் ஒன்றில் விரல் வைக்கச் சொல்கிறார்.அவர் எந்த கட்டத்தில் விரல் வைத்தாரோ அந்த கட்டத்திற்கு ஒரு விரிவுரை அதன் கீழே எழுதப்பட்டிருக்கும்.அதைப்படித்து அவர் விளக்கம் அளிப்பார்.இது போன்ற முஸ்லீம்களில் சிலர் குறிபார்கின்றனர்.இதற்கும் இஸ்லாத்திற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை.

இது ஜோதிடம் {ஜோசியம்}போன்றதாகும்.இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

யார் ஜோசியக்காரனிடம் சென்று அவன் கூறும் தகவலை உண்மை என 
நம்புகிறாரோ,அவர் முஹம்மது {ஸல்}அவர்களுக்கு அருளப்பட்ட இஸ்லாமிய  மார்கத்தை நிராகரித்தவர் ஆவார்.அவரது நாற்பது நாட்களின் 
தொழுகைகள் அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று நபி {ஸல்}அவர்கள் 
கூறினார்கள்.

ஒருவர் பயனமாகவோ அல்லது தமது தேவையின் நிமித்தமோ வீட்டை 
விட்டு புறப்படும்போது நல்ல [வாழ்த்துக்களை}வார்த்தைகளை செவியேற்றால் அதை நற்குறியாக{நற்சொல்}கருதிப் புறப்படவேண்டும்.

பூனைக் குறுக்கே வந்தாலும்,ஆந்தை அலறினலோ,விதவைப்பெண் 
முன்னால் வந்தாலோ நம் பயணத்தை நிறுத்தி,அதை நம்பினால் 
அது மூட நம்பிக்கையாகும்.

நாம் அனைவரும்  பால்கிதாபு,சோசியம்,சகுனம் என்று எதையும்
நம்பாமல்,எல்லாம் அவன் நாட்டபடிதான் நடக்கும் என்று உறுதியோட ஈமானோட அல்லாஹ்வுக்கு  இணைவைக்காமல் வாழ்வோமாக!

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும்.....


அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] 

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் நம்பிக்கை என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று  பிரார்த்தனை  செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம்.

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு.

இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான்.

டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr. Lawrence Brown), கனடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith துறையின் தலைவர். அமெரிக்க விமானப்படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக பணியாற்றியவர். 

1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை நம்பிக்கையின்பால் வந்த நேரம். 

"அது 1990 ஆம் ஆண்டு. நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள்.
 

மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு மருத்துவராக அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன். இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை.

குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன்.

இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்லவைத்தது.

பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது தான். அதுகூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்.... 

"இறைவா நீ இருந்தால்..."

அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன். இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை பிரிவிற்கு திரும்பினேன்.

என் மகள் நலமாகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். அவர் சொன்னது போன்றே இரண்டு நாட்களில் அவள் சரியாகி விட்டாள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே.... இன்று அவளுக்கு பதினெட்டு வயது. நலமாக இருக்கிறாள்.

நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்ல

பயத்தில் இறைவனிடம் வாக்குறுதி கொடுக்கும் பலரும், அவர்களுடைய தேவை நிறைவேறிய பின்னர் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க புது புது காரணங்களை கண்டுபிடிப்பர்.

என் மகள் குணமடைந்ததற்கு மருத்துவ காரணங்களை காட்டி என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், நம்பிக்கை என்னுள் ஆழமாக நுழைந்து விட்டது. நாங்கள் எடுத்த cardiac ultrasounds, ஒருநாள் பிரச்சனை இருப்பதாக காட்டியதையும் மறுநாள் அந்த பிரச்சனை இல்லை என்று காட்டியதையும் என்னால் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

நான் நினைத்ததெல்லாம் இதுதான், இறைவன் நான் கேட்டதை நிறைவேற்றி விட்டான், இப்போது நான் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
                                                                                                                

அடுத்த சில வருடங்கள் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், அவை யாவும் தோல்வியை தழுவின. கிருத்துவம் மற்றும் யூத மார்க்கத்தை பற்றி நிறைய படித்தேன். ஆனால் அவை எனக்கு முழு திருப்தியை தரவில்லை. அதுமட்டுமல்லாமல் அவற்றுடன் என்னால் ஒன்றவும் முடியவில்லை.


பிறகு ஒருநாள் குரானும், மார்டின் லின்க்ஸ் (Martin Lings) அவர்களின் புத்தகமான "Muhammed: His life based on the Earliest Sources" னும் அறிமுகமாயின.

நான் மார்க்கங்கள் குறித்து ஆராய்ந்த போது, யூத நூல்கள், வரப்போகும் மூன்று நபிமார்களை பற்றி குறிப்பிடுவதை படித்திருக்கிறேன். யஹ்யா(அலை) மற்றும் ஈசா(அலை) போன்றவர்கள் அவர்களில் இருவர், யார் அந்த மூன்றாவது நபர்? 

பைபிளில் ஏசு(அலை) அவர்கள், தனக்கு பின் வரும் நபியைப் பற்றி குறிபிட்டிருக்கிறார்கள்.

ஆக, குரானைப் படிக்கும் போது அனைத்தும் ஒத்துவர ஆரம்பித்தன (Everything started to make sense). நபிமார்கள், ஒரே இறைவன், இறைவேதம் என்று அனைத்தும் அறிவுக்கு ஒத்துவர ஆரம்பித்தது.

இஸ்லாத்தை ஏற்று கொண்டேன்.

நான் கற்றுக்கொண்ட பாடமென்றால், என்னை விட அறிவில் சிறந்த பலர் இஸ்லாம் என்னும் உண்மையை அறியாமல் இருக்கின்றனர்.

நீங்கள் புத்திசாலியா என்பது மட்டும் இங்கு முக்கியமல்ல, அந்த அறிவு உங்களுக்கு சரியான முறையில் புகட்டப்படுகிறதா என்பது தான் முக்கியம்.


"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குரான் 42:13 


"...தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப்படுத்துகிறான்" --- குரான் 24:46  
அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியிருக்கிறான்.  அதற்காக அவனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இப்போது என்னிடத்தில் ஒரு எளிமையான பார்முலா உள்ளது. அது, முதலில் படைத்தவனை அங்கீகரிப்பது, அவனை மட்டுமே வழிபடுவது மற்றும் அவனிடத்தில் மட்டுமே வழிகாட்ட கோருவது.

அவன் யாருக்கு நல்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழிகெட செய்ய முடியாது..."    

அல்ஹம்துலில்லாஹ்.


இவர் கண் மருத்துவர் என்பதால், டார்வின் கண்ணைப் பற்றி ஆராயும் போது ஏற்பட்ட தடுமாற்றத்தை அழகாக விளக்குவார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்பு தான் இவருக்கு இறைவனின் சோதனை அதிகமிருந்தது. இஸ்லாத்தை ஏற்கும் பலரும் இது போன்ற நிலையை தாண்டி தான் வருகிறார்கள் என்றாலும், ஒரு சிலருக்கு இது போன்ற சோதனைகள் அதிகமாகவே இருக்கின்றன.

"நான் முஸ்லிமானதை என் மனைவியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  என்னிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கேட்டார்.

நீதிபதி "உங்களுக்குள் என்ன பிரச்சனை" என்று கேட்ட போதும், "விவாகரத்து வேண்டுமென்று" மட்டும் தான் சொன்னார். அவர் சென்றது மட்டுமல்லாமல் என் குழந்தைகளையும் என்னிடமிருந்து அழைத்து சென்று விட்டார். என் குழந்தைகளை நான் பார்க்க வேண்டுமென்றால் பாதுகாப்பு அதிகாரியின் துணையுடன் தான் பார்க்க வேண்டும்.

என் குழந்தைகளுடன் என் வீடு, செல்வம் என்று அனைத்தையும் தன்னிடத்தே கொண்டு சென்று விட்டார் என் மனைவி. வாரமொருமுறை வாடகை செலுத்தும் அறைகளில் பிறகு என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்.

என் பெற்றோர்களோ என்னை முற்றிலுமாக நிராகரித்து விட்டனர். ஒருமுறை அவர்களிடமிருந்து வந்த கடிதம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதில், அவர்கள், என்னை பார்க்கவோ, என்னிடம் பேசவோ விரும்பவில்லை என்றும், நானும், இனிமேல் அவர்களை பார்க்க வரக்கூடாதென்றும், கடிதம் கூட அனுப்ப கூடாதென்றும் எழுதப்பட்டிருந்தது.

என் மனைவி மீதோ அல்லது என் பெற்றோர்கள் மீதோ இந்த நிகழ்வுகளுக்காக வருத்தம் இருந்ததில்லை. அவர்கள் நிலையிலிருந்து எண்ணி பார்க்கவேண்டும். அவர்கள் நான் தவறான வழியில் சென்று விட்டதாகவே நினைத்தனர். அன்றைய காலகட்டத்தில் ஊடகங்களும் அப்படி ஒரு நிலையைத் தான் ஏற்படுத்தி இருந்தன.

என் நண்பர்களும் என்னை விட்டு பிரிந்து செல்ல ஆரம்பித்தனர். இனி அவர்கள் எதிர்பார்க்கும் பழைய நபரில்லை நான்.

தற்போது நிலைமை பெரிதும் மாறி விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

என் மனைவியை விட்டு பிரிந்த எனக்கு மற்றொரு அன்பான துணையை இறைவன் ஏற்படுத்தினான். மற்றொரு குழந்தையை கொடுத்தான்.

அமெரிக்காவில் வசிக்க சிரமப்பட்ட எனக்கு இப்போதைய இருப்பிடம் புனித மதீனா நகரம். குடும்பத்தினரை விட்டு பிரிந்த நான் இப்போது உலகளாவிய இஸ்லாமிய குடும்பத்தில் ஒருவன். எங்கள் சகோதரத்துவம் போல எதுவும் வராது. நான் சொல்வது உண்டு, சகோதரத்துவம் என்றால் என்னவென்று ஒருவர் இஸ்லாத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று.

தற்போது என் பெற்றோர் என்னிடம் நெருங்கி வர ஆரம்பித்துள்ளனர். என் சகோதரர் இஸ்லாத்தை தழுவி விட்டார். என் குழந்தைகளை சுலபமாக பார்க்க முடிகிறது.

இறைவன் குர்ஆனில் சொல்லுவது போன்று, கஷ்ட காலங்களுக்கு பின்னர் சூழ்நிலைகளை எளிதாக்கி வைத்துள்ளான். நான் இழந்ததை விட பெற்றவை அதிகம்.

என்னுடைய அனுபவங்கள் மூலம், இஸ்லாத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நொடி கூட, இஸ்லாத்திற்கு வந்தால் இதை இழக்க நேரிடுமோ என்று எதை எண்ணியும் அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதியையும், பலத்தையும் கொடுக்கச் சொல்லி இறைவனிடம் துவா செய்யுங்கள். அப்படியே அவன் உங்களுக்கு சோதனைகளை தந்தாலும் அது உங்களால் தாங்கக்கூடிய அளவாக இருக்க வேண்டுமென்று அவனிடம் கேளுங்கள்.

என் அனுபவத்தின் மூலமும், நான் பார்த்த புதிய முஸ்லிம்களின் அனுபவத்திலிருந்தும் கூறுகிறேன், நீங்கள் இஸ்லாத்தை தழுவ நேர்ந்தால் அதனால் நீங்கள் பெரும் மன அமைதி என்பது, நீங்கள் இதுவரை பெற்ற எந்த ஒரு விசயத்தையும் விட மேலானதாக இருக்கும்....."

சுபானல்லாஹ்....ஈமானை இறுக பற்றி பிடித்திருக்கும் இவர்களைப் போன்றவர்களை காணும் போதெல்லாம்  நம்முடைய ஈமானும் அதிகரிக்கிறது.

டாக்டர் லாரன்ஸ் அவர்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. இவருடைய கட்டுரையான "The Big Questions", ஒருவர் தன் வாழ்நாளில் கேட்க நினைக்க கூடிய கேள்விகளை அடிப்படையாக கொண்டது.

பல நூல்களை எழுதியிருக்கும் இவர், கனடா, அமெரிக்கா, அரேபிய நாடுகள் என்று தன் தாவாஹ் பணியை செய்து வருகிறார்.

இறைவன் இவர் போன்றவர்களின் மன பலத்தை நமக்கும் தந்தருள்வானாக...ஆமின்...

எல்லாம் அறிந்தவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.
                                எல்லாம் அறிந்தவன் இறைவன்... 

                                                நன்றி.
                                                     சகோதரர்
                                       ஆஷிக் அஹ்மத் அவர்கள்.