மதமாற்றமல்ல! இது மனமாற்றம். இங்கே இருக்குது சமத்துவம்…!
20, 21ஆம் நூற்றாண்டில்தான் பலவிதமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகுக்குக் கிடைத்தன. இதன் வாயிலாக மின்சாரம் முதல் கம்ப்யூட்டர் வரை கண்டுபிடிக்கப்பட்டு இன்று நமக்கு அது தவிர்க்க இயலாததாகிவிட்டது.
தொலைதொடர்பு, போக்குவரத்து போன்றவற்றின் மூலம் இன்று உலகம் விரல் நுனியில் சுருங்கிவிட்டது. எந்தத் தொலைவிலுள்ள மனிதனும் உலகின் மற்றொரு மூலையிலுள்ள மனிதனை தொடர்புகொண்டு மருத்துவம், வியாபாரம், கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் பயனடைய முடிகிறது.
அதேநேரத்தில், இன்றுவரை நமது இந்தியத் திருநாட்டில் பல கிராமங்களிலும் ஒரு சாரார் மட்டும் ஏனோ மற்றவர்களிடமிருந்து தனித்து விடப் பட்டுள்ளனர். அவர்கள்தான் சில மதத்தினரால் தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படும் தலித்துகள்.
தலித்துகள் இந்தியாவையே ஆளத் தகுதிபெறும் அளவுக்கு பெரும்பான்மையினர். ஆனால் அவர்களின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது.
எப்படியெனில், இன்று அவர்கள் சில இடங்களில் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை விட கீழ்த்தரமாக
நடத்தப்படுகின்றார்கள்.
மேல்சாதியினர் வசிக்கும் இடங்கள் வழியாக தலித்கள் செல்லும்போது செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். சில இடங்களில் செல்லவே முடியாது.
தாழ்த்தப்பட்ட ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிணத்தை எரிக்கவோ அல்லது புதைக்கவோ இந்த மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக கொண்டுசெல்லவே முடியாது. பல மைல் தூரங்கள் தேவையில்லாமல் சுற்றிச் சென்றுதான் கொண்டு செல்லவேண்டும்.
ஐந்தறிவு கொண்ட நாய் ஒன்று மேல்சாதிக் காரனின் வீட்டில் நுழையலாம்… அங்குள்ள பாத்திரத்தில் வாய் வைக்கலாம்… அவர்களின் தெரு வழியாக இஷ்டத்துக்கு வலம் வரலாம்… ஆனால், இதே காரியங்களை இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவன் செய்தால் இவர்களின் வீடும், பாத்திரமும் உடலும் தீட்டுப்பட்டுவிடும்…! அந்தோ பரிதாபம்…!!!
மேல்சாதியினர் என்று கூறிக்கொள்வோரின் வீட்டுப் பெண்ணையோ அல்லது ஆணையோ இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணோ, பெண்ணோ நேசித்துவிட்டாலே போதும்…
அவர்களுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, சக மனிதர்கள் முன் கேவலப்படுத்தப்படுவார்கள். ஏன்…?
அவர்களுடைய உயிர் கூட பறிக்கப்பட்டுவிடும். இது நமது இந்தியாவில் இன்றும் சர்வ சாதாரணமாக
நடந்து வருபவை.
அது மட்டுமல்ல! தாழ்த்தப்பட்ட பெண் ஒருத்தி மேல்சாதிக்காரனால் மானபங்கப் படுத்தப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ அதற்கு சாட்சியே இல்லாமல் ஆக்கி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.
பரிதாபம்… பரிதாபம்…
இந்திய அரசியல் சாசனச் சட்டத்தைத் தொகுத்துத்தந்த பெருமை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவர் டாக்டர் அம்பேத்கரைச் சாரும். ஆனால் அவரது சமுதாயமோ திக்குத் தெரியாத காட்டில் உள்ளது. இதற்கெல்லாம் காரணம்… இந்த மக்கள் அண்ணல் அம்பேத்கர் மீது உயிரையே வைத்திருந்தபோதிலும் அவர் காட்டிய பாதையில் அடியெடுத்துச் செல்லாததுதான்!
கல்வி கற்பி! ஒன்று சேர்!! புரட்சி செய்!!! என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் இந்த மக்கள் மற்றவர்களைப் போல கல்வி கற்க இயலவில்லை. காரணம் பொருளாதாரம். தலைமுறை தலைமுறையாக ஆளும் வர்க்கத்திற்கு கூலி வேலை செய்வதும், கிடைப்பதை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயங்கள் என்று செலவழித்துவிட்டு கடனாளியாகி, மீண்டும் அவர்களிடமே கையேந்திக் கொண்டு நிற்பதும்தான்!
பல்லாண்டு காலங்களாக பல தலைவர்களும் முயற்சி செய்தபோதிலும் இந்தக் கொடுமைகளுக்கு இன்றும் தீர்வு இல்லை.
இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், மனிதனின் மலத்தை மனிதனையே தின்ன வைத்துள்ள அநியாயம்… அக்கிரமம்… இன்று இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு ஏற்பட்டுள்ளது.
அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது…? மேலவலவு, கொடியங்குளம், வாசாத்தி போன்ற கிராமங்களின் வரிசையில் இன்னும் எத்தனை எத்தனை கிராமங்களோ…!
ஜாதிகள் இல்லையடி பாப்பா…’ இது பிஞ்சுக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்படும் பாட்டு. ஆனால், இதைக் கற்பதற்கு பள்ளியில் சேர வேண்டுமானால் தனது ஜாதியைச் சொல்லித்தான் சேர வேண்டியதிருக்கிறது.
முன்னேறுவதற்கு முயலும் இந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு அதில் கிடைத்த பலன் பூஜ்யமே!
பல தலைவர்கள் வந்தார்கள்… சென்றார்கள்…
அவர்களால் தங்கள் சமுதாயத்திற்காகக் குரல் கொடுக்கவும், சில சலுகைகளைப் பெற்றுத்தரவும் முடிந்ததே தவிர, அம்மக்கள் சக மனிதர்களுடன் சரி சமமாகப் பழகும் உரிமையை, தலைமைத்துவத்தை வாங்கிக் கொடுக்க முடியவில்லை, கொடுக்கவும் முடியாது.
அரசாங்கமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்துமே வீணாகியதுதான் மிச்சம்.
ஏனென்றால், இது நாட்டின் கொள்கை அல்ல! அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கை. அன்றாட காரியங்கள் முதல் அவ்வப்போது நடக்கும் மதச் சடங்குகள், நல்ல நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலித்துகள் ஜாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எது எதுவெல்லாம் மனித சமுதாயத்திற்கு தீங்கு தருமோ, பாவமான காரியமோ, அந்த அனைத்திலும் ஜாதி வேறுபாடுகள் எங்கோ பறந்துவிட்டன.
`உதாரணமாக, தியேட்டரில் சினிமா பார்க்கும் ஒரு மேல்சாதிக்காரன் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை.
மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் ஜாதிப் பாகுபாடு இல்லாமல் கிண்ணங்களை மோதவிட்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதைப் பார்க்கிறோம்.
விபச்சாரம் செய்யும் ஆணும், பெண்ணும் தங்களுக்குள் என்ன ஜாதி என்று கேட்டுக்கொள்வதில்லை.
ஆனால் இதுவே நல்ல காரியங்களில் காணவே முடிவதில்லை. ஆகா… என்னே சமத்துவம்…!!!
இந்த இழிவுகளிலிருந்தெல்லாம் நீங்கி, சமத்துவம் பெறலாம் என்று கிறிஸ்துவ மதத்தில் இணைவோரும் கூட அங்கே தலித் கிறிஸ்துவன் என்ற அடையாளத்துடனேயே வாழவேண்டியுள்ளது.
எல்லாம் சரிதான்! சமத்துவத்துக்கு வேறு என்னதான் வழி என்று நீங்கள் கேட்கிறீர்களா…? திருச்சி பெல் தொழிலாளர் மாநாட்டில் தந்தை பெரியார் உரையாற்றும் போது, எங்கு சென்றாலும் உங்களை இந்த ஜாதிப்பாகுபாடு விடாது!
இந்த இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றுதான் நன்மருந்து என்று அவர் முழங்கினார்.
கொடிக்கால்பாளையத்தில், தாழ்த்தப்பட்டவராக இருந்தவர் கொடிக்கால் செல்லப்பா.
இவர் ஒரு கம்யூனிஸ்ட்வாதியாக இருந்தபோதிலும்,
தான் இருக்கும் மதத்திலிருந்துகொண்டு ஒருபோதும் ஜாதி இழிவை விட்டு அகல இயலாது என்ற நிலையில்
இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் என்ற பெயரில் இன்று தானும் தலை நிமிர்ந்து நடப்பதோடு, தன்னைச் சார்ந்த சக மக்களைப் பார்த்து,
புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! என்று புத்தகம் மூலம் அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார்.
அரசியல்வாதியாகவும், பிரபல பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராகவும் இருந்த அடியார் என்பவர், இஸ்லாம் தவிர்த்து வேறு எதுவாலும், எவராலும் தம் சமுதாயத்தை உயர்வடையச் செய்ய முடியாது என்கிற நிலையில்,
நான் காதலிக்கும் இஸ்லாம் என்ற புத்தகத்தை தன் சமுதாயத்திற்குத் தந்த கையோடு தன் வாழ்வையும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டார்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், இங்குள்ள ஜாதிவெறி போல நிற வெறியும், இனவெறியும் தலைவிரித்தாடும் அமெரிக்காவில் கறுப்பர் வெள்ளையர் என்ற வேற்றுமையால் தாங்க முடியாத பாதிப்பிற்குள்ளான கறுப்பர் இன கிறிஸ்துவராக இருந்த மால்கம் எக்ஸ், குத்துச்சண்டையில் உலக ஹெவிவெய்ட் சாம்பியனாக வலம் வந்தும் நிற இழிவால் தொடர்ந்து பாதிக்கப்பட்ட க்ளேசியஸ் கிளே என்ற முஹம்மத் அலி க்ளேயும் இஸ்லாம் ஒன்றுதான் ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடற்ற மார்க்கம் என்று உணர்ந்துகொண்டு தங்களை சமத்துவ இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவையெல்லாம், வேறு மதங்களிரிருந்து சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களின் நிலை. சரி, இந்த ஜாதி, இன, நிற, மொழி வேறுபாடுகளைக் களைய இஸ்லாம் என்னதான் கூறுகிறது என்று அறிய ஆவலா? உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வழிகாட்டியாக உள்ள திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்று பாருங்கள்:
ஓ மனிதர்களே…! உங்கள் இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள். அவன் உங்களனைவரையும் ஒரே ஆத்மாவிரிருந்தே படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (உலகில்) பரவச்செய்தான். ஆகவே இறைவனுக்கு பயந்துகொள்ளுங்கள்….. (திருக்குர்ஆன் 4:1)உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது பிறப்பினால் ஏற்படுவதல்ல, அவரவர் செய்யும் நல்ல தீய செயல்களைக் கொண்டே ஒருவன் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்று பிரிக்கப்படுவான் என்று உலகப் பொதுமறை திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
மனிதர்களே…! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிரிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) நிச்சயமாக உங்களில் எவர் (தம் செயல்கள் விஷயத்தில் இறைவனுக்கு) மிகவும் பயபக்தி உடையவரோ அவரே அல்லாஹ்விடம் உங்களில் மிகவும் கண்ணியமானவர். (திருக்குர்ஆன் 49:13)
அது மட்டுமல்ல! ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து, எந்தத் தேவையுமற்ற ஒரே இறைவனை வணங்கி வழிபட இதோ திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்
(இறைவனின் தூதரே…!) நீர் கூறும்…! இறைவன் ஒருவனே…!
இறைவன் (எவரிடத்தும்) எந்தத் தேவையுமற்றவன்…!
அவன் (யாரையும்) பெறவும் இல்லை….!
(எவராலும்) பெறப்படவும் இல்லை…!
அன்றியும் அவனுக்கு நிகராக எவருமில்லை…!!! (திருக்குர்ஆன் 112:1 4) .
இன்று இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் யாரும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல!
சில தலைமுறைகளுக்கு முன் இதுபோன்ற ஜாதி இழிவுகளிரிருந்து விடுதலை பெற முடிவு செய்து அதனடிப்படையில் தங்களை மாற்றிக்கொண்டவர்கள் தான்
இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோர். ஒரு சிறிய அளவு முஸ்லிம்கள், இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள விஞ்ஞான உண்மைகள், அறிவுப்பூர்வமான தத்துவங்கள்… இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் கவரப்பட்டு சத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்.
அது மட்டுமல்ல!
இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள முக்கிய வழிபாடுகளான தொழுகை, ஹஜ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்… ஒரு
நாளைக்கு 5 வேளை கூட்டுத் தொழுகை நடத்தப்படுகிறது.
நேற்றுவரை வேறு வேறு ஜாதிகளில் இருந்து கொண்டு ஒருவரையொருவர் சிறிதும் நெருங்காமல் வாழ்ந்துவந்த மக்கள் இன்று முஸ்லிம்களாக ஓரணியில் நின்று தோளோடு தோள் நின்று தொழும் காட்சியை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் சற்று முந்திவந்து, உயர்ஜாதியிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவியவன் தாமதமாக வந்தால், பிந்தி வந்தவன் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும்.
முந்தி வந்த சகோதரனின் கால் பிந்தியவனின் தலைமீது படும். நாட்டின் பிரதமராக இருந்தாலும், அவர் பிந்தி வந்தால் பின் வரிசையில்தான் நின்றாக வேண்டும். நான் பிரதமரல்லவா என்று முன் வரிசையில் மற்றவரை ஒதுக்கிவிட்டுச் செல்ல முடியாது.
அதுபோல, வருடந்தோறும் சவூதி அரேபியாவில் புனித மக்கா நகரத்தில் உள்ள இறை ஆலயமான கஃபாவில் ஹஜ் என்ற வணக்கம் நடைபெறுகிறது.
பல நாடுகளைச் சார்ந்த, பல மொழி, இன, நிற வேறுபாடுகளைக் கொண்ட சுமார் 35 லட்சம் பேர் ஒரே உடையில், ஒரே இடத்தில் ஒன்று கூடும் அந்த நாளில் அனைவரும் எந்த வித்தியாசமான குறுகிய எண்ணமும் இன்றி, இரண்டறக் கலந்து வலம் வரும் அந்தக் காட்சியைப் பார்ப்போர், இஸ்லாமிய மார்க்கத்தில் இந்தக் குறுகிய வேறுபாடுகளுக்கு எந்த இடமும் இல்லை என்று சத்தியமிட்டுக் கூறுவர்.
1432 வருடங்களுக்கு முன்பு, இன்று நாம் காணும் இந்த வேறுபாடுகளை விட மோசமான பாகுபாடுகள் நிலவி வந்தன.
இப்போதாவது இந்த தலித் மக்கள் தங்களது சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஓரளவாவது வாய்ப்புள்ளது.
ஆனால் அன்றைய அரபு சமுதாயத்தில் கறுப்பு இன மக்கள் அடிமைகளாக தனது முழு வாழ்வையும் இழந்து, மாட்டையும்விட கேவலமாக நடத்தப்பட்ட காலம் அது!
அந்தப் பொழுதில்தான் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் (முஹம்மது நபி) அவர்கள் மூலமாக உலகப் பொதுமறை திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டு, அதனடிப்படையில் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியையே ஏற்படுத்தியது. அந்தப் புரட்சி இரண்டு விதமாக நடத்திக் காட்டப்பட்டது.
ஒன்று : இன்று கம்யூனிஸவாதிகளால் தோழர்களே! என்று அழைக்கப்படும் அந்தப் பதம் 1432 வருடங்களுக்கு முன்பே இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களால் மன உவப்புடன் செயல்படுத்திக் காட்டப்பட்டது.
அடுத்தது : ஒரு காலத்தில் பல புரட்சிகளையும், புதுமைகளையும், தத்துவங்களையும் பேச்சிலும், எழுத்திலும் காட்டி தங்களுக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிய பல தலைவர்களுக்கு இன்று பொன்னாலும், வெள்ளி மற்றும் வெண்கலத்தாலும், பாறையாலும் சிலை வடித்து வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
ஆனால், தான் சொன்னதைச் செய்து காட்டியவர்… செய்ததை மட்டுமே சொன்ன ஒரே தலைவர்… ஒரு அறிவுப்பூர்வமான மார்க்கத்தை உலக மக்களுக்கு விளக்கிக்காட்ட வந்த உத்தமர்… அப்பேற்பட்ட நபிகள் நாயகம் அவர்கள், தான் வரும்போது மக்கள் தனக்காக எழுந்து நிற்பதையே தடுத்து நிறுத்திக் காட்டியவர்… காலில் விழுவதைக் கண்டித்தவர்…
தற்போது மொத்த உலகில் நான்கில் ஒருவரால் பின்பற்றப்படும் நபிகள் நாயகம் அவர்களுக்கு உலகின் எந்த மூலையிலும் ஒரு சிறு சிலை கூட கிடையாது என்பது மாபெரும் புரட்சிதானே…?
(சில வருடங்களுக்கு முன்னர் உலகின் பல உயர்ந்த தலைவர்களை மதிக்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிலைகளின் வரிசையில் நபிகள் நாயகம் அவர்களுக்கும் ஒரு சிலை வைத்தனர்.
பொதுவாகவே, இது சந்தோஷப்பட வேண்டிய ஒன்று.
ஆனால் நபிகள் நாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த முஸ்லிம் சமுதாயம், நபிகள் நாயகத்துக்கு வைக்கப்பட்ட சிலையை அகற்றச் சொல்லி உலகம் முழுவதும் கொந்தளித்தது.
முடிவில் அந்தச் சிலையும் அகற்றப்பட்டது. இந்தப் புரட்சியை எங்காவது காட்ட முடியுமா?
வெறும் பேச்சளவில் மட்டும் புரட்சி பேசாமல் செயல்படுத்தியும் காட்டினார்கள் நபிகள் நாயகம் அவர்கள்!
அனைத்து மக்களையும் தொழுகைக்கு அழைக்கும் அழைப்போசையை (பாங்கு) முழங்கிட அன்றை அரபு சமுதாயத்திலேயே மகா மட்டமாகக் கருதப்பட்ட கறுப்பர் இன அடிமையான பிலால் என்ற ஒரு தோழரையே நபிகள் நாயகம் அவர்கள் நியமித்தார்கள்.
இதன் காரணமாக, அதுவரை அவரை அடிமையாகப் பார்த்துக்கொண்டிருந்த அரபு மக்கள் அன்று முதல் அவரை தலைவர் என்று அழைக்கத் துவங்கிவிட்டனர்.
இதுதான் இஸ்லாம் செயல்படுத்திக் காட்டும் சமத்துவம்.
எனவே,
உயர்வுக்கு வழிவகுக்கும் சாதி, இன, நிற, மொழி மற்றும் இன்னபிற வேறுபாடுகள், மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் சத்திய இஸ்லாமிய மார்க்கத்தின்பால் உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்…!
சமத்துவம் காணுங்கள்…!!வெற்றி பெருங்கள்…!!!
படைத்த இறைவன் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக…!