சாலை விதிகளைத் தெரிந்துகொள்வதில் அக்கறை காட்டுவோம்

புவிவெப்பம், பருவநிலை மாற்றம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளால் பல்வேறு அச்சுறுத்தல்களை மனிதர்கள் எதிர்கொண்டு வருவது ஒருபுறம் இருந்தாலும், கவனமின்மையால் வாகன விபத்துகள் ஏற்பட்டு மனிதர்கள் உயிரிழக்கும் போக்கு மறுபுறம் அதிகரித்து வருவதும் கவலையளிக்கச் செய்வதாக உள்ளது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. நாட்டில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு சாலை விபத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் வாகன விபத்துகளின் பெருக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதிலும், தமிழகத்தில்தான் நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

இவற்றுக்கெல்லாம் பிரதானக் காரணம், சாலை விதிகளையும் போக்குவரத்துப் பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்காததேயாகும். இதன் தீவிரத்தை உணர்ந்து, சாலை விதிகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் சாலைகள்தோறும் சென்று பொதுமக்களிடமும்,வாகன ஓட்டுநர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மதுரை திருப்பாலையைச் சேர்ந்த33 வயது இளைஞரான ஏ.நரசிம்மமணி.

கிராம மக்கள், கல்லூரி மாணவ - மாணவியர், பள்ளிக் குழந்தைள், லாரி ஓட்டுநர்கள் எனப் பல தரப்பினரிடமும் சாலை விதிகளை எடுத்துக் கூறி வரும் பணியில் ஈடுபட்டுள்ள இவர், தனது வீட்டிலேயே இதற்காக பிரத்யேக அறைகளையும், பயிற்சி அளிக்கும் உபகரணங்களையும் வைத்து செயல்முறை விளக்கமும் அளித்து வருகிறார்.

இச் சேவைக்காகவே "டிரைவிங் நீட்ஸ் அகாதெமி' எனும் தன்னார்வ அமைப்பையும் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நடத்தி வருகிறார் இவர். சாலையோரம் வைக்கப்படும் எச்சரிக்கை சின்னம், தகவல் சின்னம், உத்தரவு சின்னம் உள்ளிட்ட சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை அளிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நரசிம்மமணியிடம் பேசினோம்.

""நான் சென்னை எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் ஆட்டோ மொபைல் பட்டயப் படிப்பு படித்துக்கொண்டிருந்த சமயம், 1997-ம் ஆண்டுவாக்கில் எனது கல்லூரி நண்பர்கள் இருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இது என் மனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் பலரும் இதுபோன்ற விபத்துகளில் சிக்காமல் தடுக்கும் வகையில், சாலை விதிகள், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வேரூன்றியது. டிப்ளமோ படிப்புக்குப் பிறகு அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் ஓட்டுநர் பயிற்சி உள்பட பல பயிற்சி படிப்புகளில் சேர்ந்து படித்தேன்.

அதன் பின்னர், மதுரை திருமங்கலத்தில் ஓர் ஆயில் நிறுவனத்தில் என்ஜின் மேற்பார்வையாளராக வேலை பார்த்தேன். அப்போது, லாரி, பஸ் ஓட்டுநர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததால், சாலை விபத்தைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கினேன்.

அதன் பிறகு, மதுரையில் உள்ள ஒரு தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் 2007-ம் ஆண்டு ஓட்டுநர் பயிற்சி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். பலருக்கும் ஓட்டுநர் பயிற்சி அளிக்க வேண்டி இருந்ததால் விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள், அதிகம் விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் பற்றிய விஷயங்கள் தெரியவந்தது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டி இருந்ததால் மற்ற நேரங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். தொடக்கத்தில் நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளின் ஓட்டுநர்களிடம் சென்று சாலைப் பாதுகாப்பு தொடர்பான சின்னங்களைக் காண்பித்தும்,துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். பலரும் இந்த விஷயங்களை அறிந்துகொள்ள தயக்கம் காட்டினர். இதனால், அவர்களுக்கு டீ, பிஸ்கட் போன்றவற்றை இலவசமாக அளித்து இதுபற்றி எடுத்துக் கூறத் தொடங்கினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.

இதனால், தொடர்ந்து இதுபோன்ற பணியை வேலைநேரம் போக ஓய்வு நேரத்தில் செய்து வருகிறேன். எனது முயற்சிக்கு நண்பர்கள் பலரும் ஊக்கமும், உதவியும் அளித்து வருகின்றனர். வனத் துறையில் ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்றுள்ள எனது தந்தை அழகிரிசாமியும் என்னை ஊக்கப்படுத்தினார்.
முதுகலை பட்டதாரியான எனது மனைவி வேல்துரைச்சியும் சாலைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுத் தகவல்களைத் தயாரித்து உதவி வருகிறார். மதுரை குலமங்கலம், மேலவாசல், காரியாபட்டி உள்ளிட்ட பல இடங்களில் பொதுச் சாவடிகளில் வைத்து பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை அளித்துள்ளேன்.

பள்ளிகளிலும் மாணவர்களுக்குப் புகைப்படங்கள், விடியோ மூலம் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். ஆனால், கல்லூரிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு தகவல்களை வழங்கச் சென்றால் அதற்கு உரிய ஊக்குவிப்பு இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

பெரும்பாலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும்போதுதான் அதிகம் விபத்துகள் நிகழ்கின்றன. பொதுவாக, வாகனம் ஓட்டும்போது நமது செயல்பாடுகள் மூளையைச் சென்றடைய 2 விநாடிகள் ஆகின்றன. ஆனால், குடிபோதையில் ஓட்டும்போது 4 முதல் 5 விநாடிகள் வரை ஆகின்றன. இதனால்தான் விபத்துகள் அதிகம் நிகழ வாய்ப்பு ஏற்படுகிறது. இதுபற்றி லாரி, பஸ் ஓட்டுநர்களிடம் எடுத்துக் கூறி புரிய வைக்கிறோம்.

 ஆனால், பலருக்கும் சாலை விதி பற்றிய சின்னங்களே தெரியாமல் உள்ளன. வாகனம் ஓட்டும் 100பேரில் 5 பேருக்குத்தான் இதுபற்றி முறையான அறிவு உள்ளது. விபத்து நிகழ்ந்த பிறகு விலைமதிக்க முடியாத மனித உயிர் இழக்கப்படுவதும், உடல் ஊனமாவதும் குறித்த அக்கறை குறைவாகத்தான் உள்ளது.

அரசு நல்ல பல விதிகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தினாலும், அதுபற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இன்னும் பொதுமக்களிடம் சென்றடையவில்லை. விபத்து என்ற எமனுடனான போராட்டம், வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய வாய்ப்பு உள்ளதால்,அதிலிருந்து மீளுவதற்கும், தவிர்ப்பதற்கும் முறையான சாலை விதிகளைத் தெரிந்துகொள்வதில் அக்கறை காட்ட வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

மதுரை மாவட்டப் பகுதியில் இதுபோன்ற விழிப்புணர்வுப் பிரசாரம் அளித்து வருகிறேன். தொடர்ந்து பலருக்கும் அளிக்க ஆர்வமாக உள்ளேன். குறிப்பாக 1 லட்சம் பேருக்கு இந்த விழிப்புணர்வை அளிக்க வேண்டும் என்பதே என் இலக்கு. இதற்காக www.drivingneedsacademy.com  எனும் இணையதளத்தையும் தொடங்கியுள்ளேன். "எங்கள் பயணம் - நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் சாலை விபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்'' என்பதே என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நரசிம்மமணி.